ஆசியப் போட்டிகளில் மிளிரும் இந்தியா! – உலக சாதனை செய்த ஹாக்கி அணி!!

0
105
Wrestling - 2018 Asian Games – Women's Freestyle 50 kg Gold Medal Final - JCC – Assembly Hall - Jakarta, Indonesia – August 20, 2018 – Vinesh Vinesh of India celebrates after winning gold medal. REUTERS/Willy Kurniawan

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆகஸ்டு 18 அன்று இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் (Jakarta & Palembang) நகரங்களில் கோலாகலமாகத் தொடங்கியது.

இந்தப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஹாக்கி, கபடி உள்பட 40 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

இந்தப் போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10000 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

அறிந்து தெளிக!!
நேற்றைய நிலவரப்படி, ஆசிய விளையாட்டு போட்டியில், 4 தங்கம், 3வெள்ளி, 8 வெண்கலம் பெற்று 15 பதக்கங்களுடன் இந்தியா 7-ஆவது இடத்தில் உள்ளது. 37 தங்கம் பெற்று சீனா, முதலாம் இடத்தில் உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஹாக்கி பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த ஆண்கள் அணி, ஹாங்காங் அணியை எதிர்கொண்டது.

Credits : TOI

ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 26 -0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது.

அணியின் ரூபீந்தர் பால் சிங் 5 கோல்களும்,

ஹர்மன்ப்ரீத் சிங் 4 கோல்களும்,

ஆகாஷ்தீப் சிங் 3 கோல்களும்,

வருண் குமார் மற்றும் மன்ப்ரீத் சிங் தலா 2 கோல்களும் அடித்தனர்.

இவர்களைத் தொடர்ந்து சுனில் எஸ்.வி, சுரேந்தர் குமார், விவேக் சாகர் பிரசாத், அமித் ரோகிதாஸ் உள்ளிட்டோரும் கோல் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா கிட்டத்தட்ட 86 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. 1932-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது. அப்போது 26- 1 என்ற கோல்கள் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது சாதனையாக இருந்தது. தற்போது ஆசியப் போட்டியில் ஹாங்காங் அணியை 26-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி, தனது சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

இதற்கு முன்னதாக சர்வதேச ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்து அணி, ஒசினியாவின் சமோ அணியை 36-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் இந்தியா தொடர்ந்து 2-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், வுஷு என்ற போட்டியில் சந்தோஷ் குமார், ரோஷிபிணி தேவி , சூர்யா பானு பிரதாப் சிங்க், நரேந்தர் க்ரேவால் ஆகிய 4 வீரர்கள், தலா 1 வெண்கலம் வீதம் 4 வெண்கலப் பதக்கங்களை  இந்தியாவிற்குப்  பெற்றுத்  தந்திருக்கின்றனர்.

 

Credit : TOI

வுஷு. இந்தப் பெயரைக் கூட பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆனால், அந்த விளையாட்டிலும் சிறந்து விளங்கி, நாட்டிற்குப் பெருமை சேர்க்க நம்மிடம் வீரர்கள் இருக்கின்றனர். நாம் தான் ஏதோ ஒரு விளையாட்டை மட்டும் பிடித்துக் கொண்டு, அதைக் கொண்டாடிக் கொண்டு மற்ற விளையாட்டுகளையும், வீரர்களையும்  அலட்சியம் செய்து வருகிறோம்.

எந்தத் துறையிலும் சிறந்து விளங்கத் திறமை மட்டும் போதாது. நாம் தரும் ஊக்கமும் அவர்களின் வெற்றிக்குப் பெரும் பங்கு வகிக்கிறது. கலைகளை ரசிப்பதில் பாரபட்சம் வேண்டாமே..!