மேற்கு இந்தியத் தீவுகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியது. ஒரு நாள் போட்டித் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் கடைசி ஒருநாள் போட்டி கோப்பை யாருக்கு ? என முடிவு செய்யும் போட்டி என்பதால் இருநாட்டு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இறுதிப் போட்டி
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இதுவரை இந்தியா 2 போட்டிகளிலும், மே.இ.தீவுகள் ஒரு போட்டியிலும், ஒரு போட்டி யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சமன் செய்யப்பட்டது. இதன்மூலம் நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் இந்தியா 3-1 என்ற கணக்கில் கோப்பையைக் கைப்பற்றும். வெற்றி மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கு கிடைத்தால் 2-2 என தொடரை சமன் செய்யும். எனவே இரு அணிகளும் தங்களுடைய முழு பலத்தையும் நாளைய களத்தில் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இந்தியாவின் பலம்
பேட்டிங் வரிசை இந்தியாவிற்குப் பெரும்பலம். துவக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் மிடில் ஆர்டரில் இந்தியா எதிரணியை துவம்சம் செய்கிறது. குறிப்பாக கோலி இந்தத் தொடரில் 3 சதங்களை விளாசியிருக்கிறார். மும்பையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் கோலி ஏமாற்றினாலும் துணைக் கேப்டன் ரோஹித்தும் அம்பத்தி ராயிடுவும் மே.இ.தீவுகளின் பந்துவீச்சாளர்களை நொறுங்கடித்து விட்டார்கள். பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்தியா சற்றே சறுக்குகிறது. எதிரணியின் பார்ட்னர்ஷிப்பை முறியடிக்க முடியாததால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மும்பையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பௌலர்களின் யுக்திகள் நல்ல பலனைத் தந்தன. நாளைய போட்டியில் அவர்களுக்கு அது தன்னம்பிக்கையைத் தரும்.

மேற்கு இந்தியத் தீவுகளின் பலவீனம்
மே.இ.தீவுகளின் பேட்டிங்கைப் பொறுத்தவரை ஷாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் மட்டுமே கைகொடுக்கிறார்கள். துவக்க ஆட்டக்காரர்கள் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் சரிவிலிருந்து அணியினை மீட்பதற்கு ஹோப், ஹெட்மயர் தவிர சரியான ஆள் மிடில் ஆர்டரில் இல்லை.
பவுலிங்கில் நர்ஸ், மெக்காய், ஹோல்டர் போன்றவர்கள் சரியான தருணத்தில் விக்கெட் எடுக்கத் தவறுகிறார்கள். குறிப்பாக ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தவும் அவர்களால் முடியவில்லை. அப்படி இருந்தும் மூன்றாவது போட்டியில் மே.இ. தீவுகள் தங்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெற்றிக்கனியை ருசித்தது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை நடைபெற இருக்கும் போட்டி இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா என்பது போலத்தான் இருக்கப் போகிறது.
தோனிக்கு கடைசிப் போட்டியா ?
இந்தத் தொடரில் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் தோனி அடுத்து நடக்க இருக்கும் T20 போட்டித் தொடருக்கு சேர்க்கப்படவில்லை. டிசம்பரில் ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் இந்திய அணியிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. எனவே பிப்ரவரியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்தான் அடுத்து தோனி ஆட வருவார். 4 மாத ஓய்வில் தோனி செல்வது இதுவே முதல்முறை. கிரிக்கெட்டிலிருந்து தோனி மெதுவாக ஓரங்கப்படுகிறார். ஆகவே இந்த ஆண்டில் அவர் விளையாடும் கடைசிப்போட்டி இதுவாகத்தான் இருக்கும். ஆகவே அவரது ரசிகர்கள் தோனியின் பேட்டிங்கைக் காண ஆர்வத்துடன் உள்ளனர்.
