இந்தியா – மேற்கு இந்தியத்தீவுகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி 32 – வது ஓவர் வரை மட்டுமே தாக்குப்பிடித்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் அரைமணி நேரத்திற்கு அதிகமாக விளையாடவில்லை. இறுதியாக முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களை எடுத்தது.

அனல் பறந்த இந்தியாவின் பந்துவீச்சு
முதல் ஓவரிலேயே பாவெலின் விக்கெட்டைச் சாய்த்தார் புவனேஷ்வர் குமார். அடுத்தடுத்து வந்த எவரும் இந்திய பௌலர்களின் பந்துவீச்சை முடியாமல் திணறி பெவிலியன் திரும்பினார்கள். அந்த அணியில் அதிகபட்சமாக ஹோல்டர் 25 ரன்கள் எடுத்தார். இந்திய அணியைப் பொறுத்தவரை ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் கலீல் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் குல்தீப் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
எளிமையான வெற்றி
இதனையடுத்து 105 எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான தவான் வழக்கம்போல் 6 ரன்களில் சொதப்பிவிடவே நம்பிக்கை நட்சத்திரம் கோலி களமிறங்கினார். ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த கோலி நிதானமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 15 வது ஓவரிலேயே இந்தியா ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றியை ருசித்தது. இந்தியாவின் ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக 63 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.