தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துவின் பதக்கம் பறிபோக இருக்கிறது.
போட்டியின்போது நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டதாக தெரியவந்துள்ளது என பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அவரது ஏ சாம்பிள் (சிறுநீர்) மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

தடை செய்யப்பட்ட நான்ட்ரோலன் என்னும் ஸ்டீராய்டை பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆசிய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதனால் கோமதி மாரிமுத்துவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக கோமதி மாரிமுத்துவின் போலந்து பயணம் தடை செய்யப்பட்டுள்ளது.
அடுத்து நடைபெற இருக்கும் இரண்டாவது கட்ட ஊக்க மருந்து சோதனையிலும் (பி சாம்பிள்) கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால், கோமதியிடம் இருந்து தங்கப்பதக்கம் பறிக்கப்படுவதுடன், 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்படும் என இந்திய தடகள சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோமதி தன்னுடைய பி சாம்பிளை கேட்டுப்பெற உரிமை இருப்பதாக சம்மேளனம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து
கோமதி மாரிமுத்து கூறும்போது, “என் வாழ்க்கையில் நான் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதேயில்லை. ஆசிய தடகளப் போட்டியின்போது நான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் பயன்படுத்தினேன். இந்தக் குற்றச்சாட்டை நான் செய்தித்தாளில்தான் பார்த்தேன். அதற்கு முன்னால் இதுபற்றி நான் எதுவும் கேள்விப்படவில்லை. இந்த விவகாரம் குறித்துத் தெளிவுபடுத்தவேண்டும் என்று தடகள சம்மேளனத்திடம் கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்து நடைபெற இருக்கும் இரண்டாம் கட்ட சோதனையில் கோமதி ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபிக்கப்பட்டுவிட்டால் ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா பெற்றிருந்த 3 தங்கப் பதக்கத்தில் ஒன்றை இழக்கும் நிலை ஏற்படும்.