மேற்கு இந்தியத் தீவுகள் உடனான T20 போட்டிகளில் ஆடும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது . அதில் தோனி, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படவில்லை. தீபக் சாஹர், சித்தார்த் கவுல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இருந்தும் தோனி நீக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது. ஏனெனில் இதுவரை எந்த T20 போட்டியில் இருந்தும் தோனி நீக்கப்பட்டதில்லை. இது தோனியுடைய கிரிக்கெட் வாழ்வின் அந்திமக்காலத் துவக்கம் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

தோனியும் T20 போட்டிகளும்
இந்தியாவில் முதல் T20 போட்டி தென்னாப்பிரிக்கா அணியுடனான 2006 – 07 தொடரில் விளையாடப்பட்டது. சேவாக் தலைமையில் விளையாடிய அந்த அணியில் தோனி இடம்பெற்றிருந்தார். அதிலிருந்து சுமார் 40 T20 தொடர்களில் 104 போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது. அதில் அதிகபட்சமாக T20 போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களில் தோனி முதலிடத்தில் உள்ளார். தோனி இதுவரை 93 போட்டிகளில் விளையாடியுள்ளார். இரண்டாவது இடத்தில் ரோஹித் ஷர்மா (84 போட்டிகள்) உள்ளார்.
தோனி தலைமையினாலான இந்திய அணி இதுவரை 72 போட்டிகளில் விளையாடி அதில் 42 – ல் வெற்றி பெற்றுள்ளது. உலகக்கோப்பை, சாம்பியஸ் டிராபி போன்றவற்றையும் இந்தியாவிற்கு கைப்பற்றிக் கொடுத்தவர். இந்நிலையில் சமீபகாலமாக நடந்த போட்டிகள் எதிலும் சோபிக்காததால் இந்திய கிரிக்கெட் வாரியம் இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது.
மிஸ்டர் கூல்
அது தான் தோனியின் புனைப் பெயர். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் வெற்றியை மட்டுமே அவரது கண்கள் குறிவைத்திருக்கின்றன. தோல்வியை ஏற்றுக் கொள்வதிலும், வெற்றியினை பகிர்ந்து கொண்டாடுவதுமே அவரது ரசிகர்களை இன்று வரை அவர் பின்னால் இருக்க வைத்திருக்கிறது. கேப்டனாக இல்லாத போட்டிகளிலும் பல நேரங்களில் முக்கிய அறிவுரைகள் தோனியிடமிருந்தே அணியினருக்கு வழங்கப்படும்.

தற்போது இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் தோனி ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளிலும் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 மாதம் கழித்து பிப்ரவரியில் நடக்கும் நியூசிலாந்து அணியுடனான T20 போட்டியில் தான் தோனி பங்கேற்க முடியும். இடையில் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தோனி இந்திய அணியில் இருந்து மெதுவாக ஓரங்கட்டப்படுகிறார் என்பது தெளிவாகிறது.
தேர்வு வாரியம் சொல்வது என்ன ?
வீரர்களைத் தேர்வு செய்யும் வாரியத்தலைவர் எம்எஸ்கே பிரசாத் இதுகுறித்து கூறுகையில் எதிர்காலத்தில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சிறந்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவே இந்த முடிவினை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இதனால் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவேன் என தோனி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.