உலககோப்பை தொடரின் 25 வது லீக் ஆட்டம் நேற்று எட்ஸ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி தாமதமாக தொடங்கியதால் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்க வீரர் ஹாஷிம் ஆம்லா அரைசதம் அடித்து கைகொடுத்தார். ஆனால் மறுமுனையில் வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. நேற்றைய போட்டியில் ஆம்லா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 8000 ரன்கள் என்ற மைல் கல்லை கடந்தார். 176 இன்னிங்ஸ் விளையாடி அதிவேகமாக 8000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஆம்லா நிகழ்த்தினார். 175 இன்னிங்ஸில் 8000 ரன்களை கடந்த விராட் கோலி முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டார். ஒரு இன்னிங்ஸில் முதல் இடத்தை ஆம்லா கோட்டை விட்டுள்ளார்.

மார்கிரம், பாப் டு ப்ளேசிஸ் மிகவும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். மேட்ச் பார்க்க வந்தவர்கள் கொட்டாவி விடும் அளவிற்கு மேட்ச் போரடித்தது. துவக்கத்தில் 300 ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாபிரிக்கா நியூசிலாந்து பவுலர்களின் வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். மில்லர் – டுசன் இணை சிறிதுநேரம் தாக்குப்பிடித்தது. ஆனாலும் மில்லர் பேட்டிங் என்பதையே மறந்தவர் போல காணப்பட்டார். இங்கிலாந்தில் ஏற்கனவே குளிர்காற்று காதுக்குள் உய்ய் என்கிறது. போதாத குறைக்கு மில்லர் வேறு பேட்டை சுழற்றி காற்று வீசிக்கொண்டிருந்தார். பொறுப்பாக விளையாடிய வான் டர் டஷன் 67 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் பெர்குசன் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பேட்டிங்கில் தான் நாங்கள் கொஞ்சம் அப்படி இப்படி இருப்போம். பவுலிங் என வந்துவிட்டால் சூரப்புலி என்று சொல்லும் அளவிற்குத்தான் இருந்தது தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சு. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. கப்டில் 35 ரன்கள் எடுத்து ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். மன்றோ 9, ராஸ் டெய்லர் 1, டாம் லாதம் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். 90 ரன்களை அந்த அணி எட்டுவதற்குள் நான்கு விக்கெட்டுகள் காலியாக உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர் தென்னாப்பிரிக்க ரசிகர்கள்.
அதிரடி இணை
மூழ்கும் கப்பலாய் இருந்த நியூசிலாந்தை கிராண்ட்ஹோம், கேப்டன் கேன் வில்லியம்சன் இருவரும் கஷ்டப்பட்டு கரைசேர்த்த்தனர். வில்லியம்சன் மிக அபாரமாக விளையாடி 138 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 1 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கிராண்ட்ஹோம் 47 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இறுதியில் 3 பந்துகள் மீதமிருந்த போதே வெற்றி இலக்கை எட்டிய நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. 106 ரன்கள் குவித்த வில்லியம்ஸன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் தான் இதுவரை 5 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வென்ற நியூஸிலாந்து 9 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா தான் விளையாடிய 6 போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்து, 3 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் அரையிறுதி வாய்ப்பை தென்னாப்பிரிக்கா இழந்தது. இதுவரை உலககோப்பையை வென்றதில்லை என்ற மோசமான ரெக்கார்டை இந்தவருடமும் தென்னப்பிரிக்காவால் உடைக்க முடியாமல் போனது குறித்து அந்த அணி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
.