இந்தியாவும் பாக்கிஸ்தானும் சாதாரண போட்டிகளில் மோதினாலே உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகிவிடும். அதுவும் உலககோப்பையில் இந்த இரண்டு அணிகளும் களம் கண்டால்? ரட்சகன் நாகர்ஜுனா போல நரம்புகள் புடைக்க மேட்ச் பார்க்கத் தயாராகிவிடுவார்கள் இருநாட்டு ரசிகர்களும். அப்படித்தான் இருந்தது நேற்றைய போட்டியும். இந்தியா-பாகிஸ்தான் மோதல் நடந்த மான்செஸ்டர் ஸ்டேடியம் 26 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்டது. இந்த ஆட்டத்திற்காக மட்டும் 8 லட்சம் பேர் டிக்கெட் கேட்டு ICC யிடம் விண்ணப்பித்திருக்கிறார்கள். அடாது மழையிலும் விடாது வெற்றியைத் துரத்தி வெற்றி பெற்றது இந்தியா. மான்செஸ்டர் நகரில் நடந்த இப்போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது டாசை வென்று இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு பணித்தார். அவர் செய்த முதல் தவறு அதுதான். கடந்த சில நாட்களாக அங்கே மழை இருந்திருக்கிறது. அதனால் அந்த முடிவை அகமது எடுக்க, பேட்டைத் தூக்கிக்கொண்டு குஷியாகிவிட்டார்கள் ரோஹித் ஷர்மாவும், கே.எல்.ராகுலும். ஷிக்கர் தவனுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.

சிதறடித்த ரோஹித்:
முதல் ஓவரை வீசிய ஆமிர் பந்தில் வித்தை காட்டினார். அந்த ஓவர் மெய்டன் ஆனதும் இந்தியர்களின் ஹார்ட்பீட் சற்றே உச்சத்தை தொட்டுவந்தது. ஆனால் அடுத்தடுத்த ஓவர்களில் இந்திய ஒப்பனர்கள் சுதாரித்துக்கொண்டனர். “தவான் போனா என்ன மக்களே நான் இருக்கேன்” என கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினார். மற்றொரு புறம் ஹிட்மேன் ரோஹித் பாகிஸ்தான் பவுலர்களை கதறவிட்டுக்கொண்டிருந்தார். அபாரமாக ஆடிய இந்த இணை 136 ரன்களைக் குவித்தது. 57 ரன்களில் ராகுல் வெளியேற கிங் கோலி உள்ளே வந்தார்.
துவக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, ரோஹித்தின் ரன் பசிக்கு வழிவிட்டுக்கொண்டிருந்தார். தெறிக்கும் பார்மில் இருந்த ரோஹித் தனது 24-வது சதத்தை நிறைவு செய்தார். அதன்பிறகு கியரை உயர்த்தி ருத்ரதாண்டவம் ஆடினார் ரோஹித். ஆனால் அவரது அதீத ரன் பசி அவரைக் காலி செய்தது. ஹாசன் ஓவரில் எங்கயோ போன பந்தை ஸ்கூப் ஆட முயற்சித்து ரியாசிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 113 பந்துகளில் 140 ரன்கள் குவித்திருந்த ரோஹித் பெவிலியன் திரும்ப 3-வது விக்கெட்டுக்கு ஆல்- ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இறக்கப்பட்டார். சிறிது நேரம் வேடிக்கை காட்டிய பாண்ட்யா 26 ரன் எடுத்திருந்த போது முகமது அமிரின் பந்து வீச்சில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து கேட்ச் ஆனார். இதைத் தொடர்ந்து வந்த மூத்த வீரர் தோனி ஒரு ரன்னில் அவுட்டாகி ஷாக் கொடுத்தார்.

இந்திய அணி 46.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் 45 நிமிடங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. வந்த மழை இந்தியாவின் பேட்டிங் தீயில் தண்ணீரை ஊற்றிவிட்டுச் சென்றது. மழை ஓய்ந்தபின்னர் துவங்கப்பட்ட ஆட்டத்தில் கோலி (77) வெளியேறினார். கடைசி நேரத்தில் கைகோர்த்த விஜய் ஷங்கர் – கேதார் ஜாதவ் இணையால் அதிரடி காட்டமுடியவில்லை. இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 336 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்கு
பாகிஸ்தானுக்கு இதுவே மிக அதிகம் என்ற மூடில் ரசிகர்கள் இருந்தனர். அதற்கு தோதாக பாகிஸ்தானின் துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக், விஜய் ஷங்கரின் பந்துவீச்சில் காலியானார். அதற்கடுத்து பக்கர் சமான் – பாபர் ஆசம் இணை நிதானமாக ஆடி நிலைமையை சமாளித்தனர். ஆனால் அவர்களால் ரன் குவிப்பில் ஈடுபடமுடியவில்லை. புவனேஸ்வர் குமார் தனது மூன்றாவது ஓவரை வீசும்போது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட மைதானத்தை விட்டே வெளியேறினார். அவருடைய இடத்தை விஜய் ஷங்கர் கவனித்துக்கொண்டார். பாகிஸ்தான் வீரர்கள் பொறுமையாக ஆடி காலூன்றிக்கொண்டிருந்த போது” இதுல எப்படின்னே வெளிச்சம் வரும்” என குல்தீப் யாதவ் இருவரையும் அவுட்டாக்கி இந்திய கொடியை உயரப்பறக்கவிட்டார்.

அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் பல்லாயிரம் வருடமாக ஆடிவரும் முகமது சோயிப் மாலிக் டக்கிலும், ஹபீஸ் 9 ரன்னிலும், கேப்டன் சர்ப்ராஸ் அகமது 12 ரன்களிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை உறுதி செய்தார்கள். அந்த அணி 35 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் -லீவிஸ் விதிப்படி பாகிஸ்தான் 40 ஓவர்களில் 302 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. மீதமுள்ள 5 ஓவர்களில் 136 ரன் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானும் வேறுவழியில்லாமல் ஐந்து ஓவர்களை ஆடித் தோற்றது. 40 ஓவர்களில் பாகிஸ்தான் அணியால் 6 விக்கெட்டுக்கு 212 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை சுவைத்தது.

உலகக்கோப்பை தொடரில் இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை இந்தியா மீண்டும் ஒருமுறை நிகழ்த்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இதுவரை 7 முறை உலககோப்பை போட்டிகளில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றியை ருசித்திருக்கிறது.
அதிரடியாக விளையாடி சதமடித்த ரோஹித் ஷர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.