2019 ஆம் ஆண்டிற்க்கான உலககோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நேற்று துவங்கின. முதல் போட்டியில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று ஆரம்பத்திலேயே அதிரவிட்டிருக்கிறது.

டாஸ் வென்ற தென்னாபிரிக்க கேப்டன் டுபிளேசி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இங்கிலாந்தின் ஜேசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இம்ரான் தாகீர் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே பேர்ஸ்டோ தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சந்தித்த முதல் பந்தோடு அவர் பெவிலியன் திரும்ப ஜோ ரூட் களத்திற்கு வந்தார். ராய் – ரூட் கூட்டணி நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. இந்த இணையை பிரிக்க டுபிளேசி பல்வேறு யுக்திகளை கையாண்டாலும் ஒன்றும் உதவவில்லை. ராய் 54 ரன்களும், ரூட் 51 ரன்களும் எடுத்து வலுவான நிலைக்கு அணையை எடுத்துச்சென்ற பின்னர் ஆட்டமிழந்தனர்.

இந்த இருவரையும் அவுட்டக்கியதில் துள்ளிக்குதித்த தெ.ஆ.வீரர்களை அடுத்துவந்த மோர்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் நோகடித்தார்கள் என்றே சொல்லவேண்டும். அணியின் ஸ்கோர் இதன் பின்னர் மளமளவென்று எகிறத் தொடங்கியது. மோர்கன் 57 ரன்னும், ஸ்டோக்ஸ் 87 ரன்களும் எடுத்தனர். அடுத்துவந்த வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தாலும் அந்த அணி 50 ஓவர் முடிவில் 311 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்க வீரர்கள் இங்கிடி 3 விக்கெட்டுகளையும், தாகிர் மற்றும் ரபாடா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பெலுக்வாயா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியை கொடுத்தனர். துவக்க ஆட்டக்காரரான டீகாக் (68) மற்றும் டசன் (50) மட்டுமே அரைசதம் கண்டார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டுபிளேசி 5 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த யாரும் வெகுநேரம் கிரீசில் நிலைக்கவில்லை. இதனால் 39.5 வது ஓவரிலேயே தென்னாப்பிரிக்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், பிளாங்கட் மற்றும் ஸ்டோக்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஆதில் ரஷீத் மற்றும் மொயின் அலி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன்மூலம் உலககோப்பை 2019 தொடரின் முதல் வெற்றியினை இங்கிலாந்து ருசித்திருக்கிறது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற இருக்கும் இரண்டாவது லீக் போட்டியில் மேற்கு இந்தியத்தீவுகள் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.