நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாக்கிஸ்தான் மற்றும் வங்கதேசம் தங்களது கடைசி லீக் போட்டியில் சந்தித்தனர். அரையிறுதிக்கு செல்ல வங்கதேசத்திற்கு வாய்ப்பு இல்லை என உறுதியாகிவிட்ட நிலையில், பாகிஸ்தான் நூற்றாண்டு கண்டிராத இலக்கு வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால் வாய்ப்பு கிடைக்கும் நிலை. அதாவது 300 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும். அப்போது நியூசிலாந்து அணியைப்போலவே 11 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தானின் ரன் ரெட் ஏறும். ஆனால் இதெல்லாம் நடப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு பாகிஸ்தான் கேப்டன் கடவுள் அருள் இருந்தால் நாங்கள் 500 ரன்கள் கூட அடிப்போம் என்றது அந்த அணி ரசிகர்களை உற்சாக நிலைக்கு கொண்டுசென்றது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. இதனையடுத்து பக்கர் சமான் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். 13 ரன்களில் சமான் மெஹதி ஹாசனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஒன் டவுனில் உள்ளே வந்த பாபர் ஆசம் இமாம் உடன் கைகோர்த்தார். இந்த இணை சிறாப்பாக விளையாடி ரன்களைக் குவித்தது. வங்கதேச பந்துவீச்சை பறக்கவிட்ட இருவரும் 157 ரன்களை சேர்த்தனர். 96 ரன்னில் இருந்த ஆசம் சைபுதீன் பந்தில் எல்பிடபிள்யு ஆகி சதத்தை தவறவிட்டார். கொஞ்ச நேரத்திலேயே சதம் கண்ட இமாமும் நடையைக்கட்டினார். அதன்பின்னர் ஹபீஸ் 27 ரன்கள் எடுத்து அவுட்டாக, இமாத் வசீம் பொறுத்தது போதும் பொங்கி எழு என பொங்கினார். 26 பந்துகளை சந்தித்த இவர் 43 ரன்களை விளாசி ஓய்வெடுக்க சென்றுவிட்டார். அதற்கு பிறகு வந்த எல்லோரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர். இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்தது.

அந்த 8 ரன்கள்
ரன் ரேட் கணக்குப்படி வங்கதேசத்தை 7 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தால் பாகிஸ்தானிற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லும்போதே கடுப்பாகத்தான் செய்தது. ஆனால் அமீர் வீசிய இரண்டாவது ஓவரிலேயே பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக உலககோப்பை போட்டியை விட்டு வெளியேறியது. அப்போது ஸ்கோர் 8. இருப்பினும் பாக். பவுலர்கள் வங்கதேச வீரர்களுக்கு கடும் நெருக்கடியை அளித்தனர் என்றே சொல்ல வேண்டும். இக்பால் 8 ரன்னிலும், சர்க்கார் 22 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் உள்ளே வந்த ஷகிப் அல் ஹசன் தனக்கே உரித்தான பாணியில் அடிக்கத்தொடங்கினார். ஆனால் அவருக்கு கம்பெனி கொடுக்க வங்கதேச பேட்ஸ்மேன்கள் தவறினர். லிட்டன் தாஸ் மட்டும் 32 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும்படி ஏதும் அடிக்கவில்லை. சிறப்பாக ஆடிய ஷகிப் 64 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்னர் வங்கதேச பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் அந்த அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அபாரமாக பந்துவீசிய பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடி 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இவ்வாறாக பாகிஸ்தானும் வங்கதேசமும் ஒன்றாக ஊருக்கு கிளம்பினர்.