உலக கோப்பை 2019 தொடரின் ஆறாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாட்டிங்காம் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றினை அளித்துள்ளது. தனது முதல் போட்டியில் மேற்கு இந்திய தீவுகளிடம் 105 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியடைந்த பாகிஸ்தானின் இந்த திடீர் பதிலடி கிரிக்கெட் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் செய்வதாக அறிவித்தது. உலகக்கோப்பைக்கு முந்தைய தொடரில் பாகிஸ்தானை வச்சு செய்த தைரியத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் இப்படி ஒரு முடிவை எடுத்தார். ஆனால் முடிவு விபரீதமாகி போனது. பாகிஸ்தானின் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இமாம் உல் ஹக் மற்றும் ஃபக்கர் சமான் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இந்த இணை விக்கெட் இழப்பின்றி 82 ரன்களை குவித்தது.
இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர், மார்க் வுட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் என யார் பந்திலும் பாரபட்சம் காட்டாது வெளுத்தனர் இவர்கள் இருவரும். வேகப்பந்து வீச்சாளர்கள் இனி உதவமாட்டார்கள் என மொயின் அலியிடம் பந்தைக் கொடுத்து பக்கர் வழியனுப்பி வைத்தார் இயான் மார்கன். ஆனால் அடுத்து வந்த பாபர் ஆசம்க்கு சமான் எவ்வளவோ பரவாயில்லை என இங்கிலாந்து வீரர்கள் சொற்ப நேரத்திலேயே உணர்ந்து கொண்டனர். 21-வது ஓவரில் மொயின் அலி இமாமை அவுட் ஆக்க, முகமது ஹபீஸ் பேட்டிங் செய்ய வந்தார். ஆசம் மற்றும் ஹபீஸ் இருவருமே சிறப்பாக ஆடி அரைசதம் கண்டனர்.

இந்த இணையை பிரிக்க இங்கிலாந்து பவுலர்களால் முடியவில்லை. ஸ்கோர் கிடுகிடுவென எகிறியது. 63 ரன் எடுத்திருக்கையில் பாபர் ஆசம் வோக்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து கேப்டன் சர்பராஸ் அகமது களமிறங்கினார். மற்றொரு முனையில் இருந்த தனக்கே உரித்தான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த ஹபீஸ் 84 ரன்களில் அவுட்டாக, கேப்டன் சர்பராசும் 55 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காத போதிலும் அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அற்புத ஆட்டத்தால் 50 ஓவர் முடிவில் அந்த அணி 358 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து பவுலர்களில் வோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் தலா மூன்று விக்கெட்டுகளையும், மார்க் வுட் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கடின இலக்கு
349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்தின் துவக்க வீரர்கள் பாகிஸ்தானின் பந்துவீச்சில் திணறினார்கள். ஜேசன் ராய் 8 ரன்னில் வெளியேறி ஆரம்பத்திலேயே அதிர்ச்ச்சியளித்தார். பேர்ஸ்டோவும் 32 ரன்களில் பெவிலியன் திரும்ப ஜோ ரூட் உள்ளே வந்தார். அவர் நிலைத்து ஆடினாலும் மற்றொருபுறம் மார்கன் மற்றும் ஸ்டோக்ஸ் வந்த வேகத்திலேயே வெளியேறினர். ரூட்டுடன் இணைந்த பட்லர் அனாயசமாக விளையாடினார். இருவருமே திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பாகிஸ்தான் கையிலிருந்த வெற்றி இங்கிலாந்திற்கு சென்றது. ஆனால் ஆட்டத்தின் திருப்புமுனையாக 103 ரன்னில் பட்லரும், 107 ரன்னில் ரூட்டும் வெளியேறினார்கள்.

அதற்கு பின்வந்த யாரும் வெகுநேரம் கிரீசில் நிலைக்கவில்லை. இதனால் 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 334 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக முகமது ஹபீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.