இந்த ஆண்டிற்கான ஆசியக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 15 – ஆம் தேதி துவங்கியது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன.
முதலில் நடைபெற்ற லீக் போட்டிகளில் இலங்கை மற்றும் ஹாங் காங் அணிகள் வெளியேறின. அடுத்ததாக நடைபெற்ற சூப்பர் 4 – ல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் தோல்வியைத் தழுவி நாடு திரும்பின. இந்நிலையில், இன்று நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா வங்க தேசத்தை எதிர் கொள்கிறது. துவக்கத்திலிருந்து வெற்றியை மட்டுமே பெற்று வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைக்குமா? என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தோல்வியைத் தோற்கடி
தனது முதல் ஆட்டத்தினை ஹாங் காங் அணியிலிருந்து துவங்கிய இந்திய அணி இதுவரை எந்தப் போட்டியிலும் தோல்வியைச் சந்திக்கவில்லை. தவான், ரோஹித் ஆகியோரின் சிறப்பான துவக்க ஆட்டம் இந்தியாவின் வெற்றியை எளிதாக்கியிருக்கிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ரா, புவனேஷ்வர் குமார் ஸ்டம்புகளை சிதறடிக்கிறார்கள். குல்தீப், ஜடேஜா, சஹால் ஆகியோரின் சூழல் பந்துகளில் எதிரணியினர் தொடர்ந்து சுருண்ட வண்ணம் உள்ளனர். இதனால் ஆசியக்கோப்பையின் எல்லா போட்டிகளிலும் இந்தியா வாகைப் பூக்களை மட்டுமே வாரி எடுத்திருக்கிறது.
வரலாறு சொல்வது என்ன?
ஆசியக்கோப்பை போட்டிகளில் இந்தியா இதுவரை 6 (1984, 1988, 1990–91, 1995, 2010,2016) முறை சாம்பியன் பட்டத்தினைக் கைப்பற்றி உள்ளது. வங்கதேசம் ஆசியக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இதுவரை வென்றதில்லை. இந்த முறையாவது வங்கதேசம் இந்தப் பெயரை மாற்றிக் காட்டுமா? என்று வங்கதேச ரசிகர்கள் ஆர்வமாய் உள்ளனர்.

யாருக்கு பலம் அதிகம் ?
வரலாறுகளை வெல்லக் கடின உழைப்பு மட்டும் இருந்தால் போதும். அதன்படி இன்றைய போட்டியில் கோப்பையைக் கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாகப் போராடும். இந்தியாவைப் பொறுத்தவரை ஆரம்ப ஆட்டக்காரர்களான தவான், ரோஹித் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் வெற்றியை எளிதாக்கும். அதேநேரத்தில் மிடில் ஆர்டரிலும் ராயுடு, கார்த்திக் ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர். இந்தியாவின் பந்துவீச்சு மற்றுமொரு பலம்.

வங்கதேசம் முன்னணி வீரர்களான ஷாகிப் அல் ஹசன், தமீம் இக்பால் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. முஸ்தபிசூர் ரஹ்மான் மட்டுமே ஓரளவிற்கு பந்துவீச்சில் சோபிக்கிறார். இந்தியா போன்ற அணிக்கு எதிராக வெற்றி பெற பெரிய இலக்குகளை நிர்ணயிக்கும் அளவிற்கு வங்கதேச பேட்ஸ்மேன்கள் தங்கள் திறமைகளைக் காட்டியே ஆக வேண்டும். வலுவான இந்திய அணியின் பேட்டிங்கை வங்கதேச பவுலர்கள் எதிர்கொள்ளும் விதமே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும்.
பாம்பு டான்ஸ்
வங்கதேச அணி ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் போதும் பாம்பினைப் போல் ஆடுவது வழக்கம். இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் வரலாற்றை வங்கதேசம் மாற்றி எழுதுமா ? அல்லது சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்து பாம்பின் பல்லை இந்தியா பிடுங்குமா? என்பதற்கு விடை இன்றிரவு தெரிந்துவிடும்.