கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத பாமரர்களுக்கும் தெரிந்த ஒரே பெயர். சச்சின். சர்வதேச அரங்கில் நூறு சதங்கள், அதிக ரன்கள் எடுத்த வீரர் என சச்சினின் சாதனைகளின் பட்டியல் நீளம். எது சச்சினை கிரிக்கெட்டின் கடவுளாக்கியது? சந்தேகமே இல்லாமல் அவருடைய பிரம்மாண்ட உழைப்பு ஒருபுறம் இருந்தாலும் கிரிக்கெட்டின் மீது அவருக்கு இருந்த காதல் தான் மற்றொரு காரணம்.

எத்தனை நாடுகள் எத்தனை மைதானங்கள் அத்தனையிலும் சச்சின் தனது சாதனை கொடியை உயரப் பறக்கவிட்டுள்ளார். சச்சினின் கவர் டிரைவ், ஸ்கொயர் கட், ஸ்ட்ரைட் டிரைவ் ஆகியவற்றிற்கு பக்கத்தில் யாராலும் நெருங்க கூட முடியாது. அத்தனை துல்லியமான ஷாட்களை எப்போதும் தனது கைவசம் வைத்திருந்தார் சச்சின்.
அம்புரோஸ், மெக்ராத், பிரெட் லீ, வாக்கர் யூனிஸ், வாசிம் அக்ரம், முரளிதரன், வார்னே என பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த பவுலர்களை எல்லாம் தனது அசாத்திய திறமையால் சிதறடித்துக் காட்டியவர்.
வெற்றிக்காக இறுதிவரை போராடும் மாபெரும் தன்னம்பிக்கை கொண்ட சச்சினின் முகத்தில் கோபத்தை காண்பது அரிதிலும் அரிது. தன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், கேலி கிண்டல்களுக்கு தனது பேட்டின் மூலமே பதிலளித்து பழக்கப்பட்டவர் சச்சின். ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் இல்லையா?

2004 ஆம் ஆண்டு சச்சினுக்கு சிறப்பானதாக அமையவில்லை. தொடர் தோல்விகள். சொற்ப ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார். நடுவர் தவறாக அவுட் கொடுக்கும்போதும் கவலை தோய்ந்த முகத்தோடு பெவிலியன் திரும்பும் சச்சினின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. இறுதி போராட்டதில் சச்சின் இருப்பதாக கிண்டல்கள் எழுந்தன.
அந்த ஆண்டு மட்டுமல்லாது 2005 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளிலும் சச்சினின் சோதனை தொடர்ந்தது. அணியில் மூத்த வீரர்களே முகம் சுளித்தனர். ஒவ்வொரு முறை பேட்டிங் செய்ய சச்சின் வரும்போதும் கேட்கும் சச்சின், சச்சின் என்னும் ரசிகர்களின் தேசிய கீதம் மட்டும் மாறவேயில்லை. இனி சச்சினால் மீண்டு வர முடியாது என முன்னாள் வீரர்கள் கருத்துத்தெரிவித்தனர். அப்போதுதான் அந்த மேட்ச் நடந்தது.

இலங்கை உடனான டெஸ்ட். அடுத்த சதம் அடித்து நான் ஜெயிக்க பிறந்தவன் என பேட்டால் எழுதிக்காட்டினார். அடுத்த வருடம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் நான்காவது இன்னிங்க்ஸில் இந்தியா 397 ஐ சேஸ் செய்து வெற்றியை எட்ட காரணமாக இருந்தார் சச்சின். அந்த போட்டியில் திராவிட், லக்ஷ்மன் ஆகியோர் போனாலும் இறுதிவரை போராடி சதம் விளாசினார் சச்சின்.
சச்சின் ஒரு சகாப்தம். இந்தியர்களின் உணர்வுகளோடு ஒன்றிப்போன விஷயம். எத்தனை முறை தோல்வி தன் பாதையை வழிமறித்தாலும் அத்தனை முறையும் அதை சந்தித்து சமராடி வெற்றிபெறும் மகத்தான போராளி தான் சச்சின். அவர் தான் இந்தியர்களின் என்றென்றைக்குமான நாயகன்.