ஆரம்பித்து விட்டது ஐ.பி.எல். ஐம்பது நாட்கள். எட்டு அணிகள். ஒரே கோப்பை. தூக்கப்போவது யார்? இந்த ஒரே கேள்விதான் இப்போது அனைவரது வாயிலும் முனுமுனுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். கடைசியில் முதலில் வரும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதனால் ஒவ்வொரு போட்டியும் வாழ்வா சாவா தான்.
முதல் போட்டி
இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் முதல் போட்டி சென்னையின் தாயகமான சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னையும் பெங்களூரும் களம் காண்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ராசியான மைதானம் என்பதால் ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே சென்னை அணியினை வெற்றி பெற்றிருக்கிறது பெங்களூரு. தற்போது டிவில்லியர்ஸ், கோலி, ஹெட்மயர் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மற்றும் உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், மொயீன் அலி போன்றோர் பந்துவீச்சில் பக்கபலமாக இருப்பார்கள் என்பதால் இன்ற போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
இந்திய அணி உலகக்கோப்பை வெல்லும்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் (பேட்டிங்) இந்த ஆண்டும் பெங்களூரு அணிக்கு பயிற்சியாளராக நீடிக்கிறார். இதுவரை கோப்பையை தன் கைகளால் தொட முடியாமல் இருந்த பெங்களூரு இந்த ஆண்டாவது வெற்றிபெறுமா என்று அந்த அணி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
சென்னை
மூன்று முறை சேம்பியன், ஆடிய அனைத்து தொடரிலும் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி, இந்தியா முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ். தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த அணிக்கு உண்டு. தோனி, ரெய்னா, பிராவோ, ஜடேஜா போன்ற வீரர்கள் ஆரம்பம் முதலே சென்னையின் வெற்றிக்கு வித்திட்டவர்கள்.
ஆட்டத்தை எந்த நேரத்திலும் மாற்றும் திறமையுள்ள பல வீரர்களைக் கொண்டிருப்பதால் சென்னை அணி விளையாடும் அனைத்து போட்டிகளுமே விசில் தூள் பறக்கும். இரண்டு ஆண்டு தடையில் இருந்து மீண்டுவந்த சென்னை அணி சென்ற ஆண்டு கோப்பையை தட்டித் தூக்கியது. அந்த அணியின் வெற்றிபயணம் இந்த ஆண்டும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஐ.பி.எல் போட்டிகள் முழுவதையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் காணலாம். இன்று மொத இருக்கும் இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அணி வீரர்கள்
ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், டேவிட் வில்லி, மொகித் ஷர்மா அல்லது ஹர்பஜன்சிங்.
பெங்களூரு அணி வீரர்கள்
பார்த்தீவ் பட்டேல், விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஹெட்மயர், ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், பவான் நெகி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஷிவம் துபே அல்லது மொயீன் அலி.