இந்த வருட ஐ.பி.எல் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேற்று ஜெய்ப்பூரில் மோதின. இந்த ஆண்டு தொடரில் இரு அணிகளுமே மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியைக்கூட பெறவில்லை. அதனால் இந்தப் போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு இரு அணி ரசிகர்களுக்கிடையேயும் இருந்தது.

பெங்களூரு பேட்டிங்
கோலியும், பார்த்திவ் படேலும் ஓப்பனிங் இறங்கினார்கள். இருவருமே சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பவர்ப்ளே முடிவில் இந்த இணை 48 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 7 வது ஓவரில் கோலி தனது விக்கெட்டை ஸ்ரேயாஸ் கோபாலிடம் பறிகொடுத்தார். அடுத்த வந்த டிவில்லியர்ஸ் (13), ஹெட்மயர் (1) ஆகியோர் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.
அதன் பின்னர் பர்தீவ் படேலுடன், ஸ்டோனிஸ் இணைந்தார். நிலைமையைக் கருத்தில்கொண்டு படேல் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்தார். ஆர்ச்சர் வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முற்பட்டு ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து பார்த்திவ் படேல் 67 ரன்கள் சேரத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மொயின்அலி, ஸ்டோனிஸுடன் சேர்ந்தார். ஸ்டோனிஸ் 31 ரன்களிலும், மொயின் அலி 18 ரன்களும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது.
பாய்ந்த பட்லர்
159 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் பட்லர் – ரஹானே இணை அதிரடி காட்டினர். பெங்களூரு அணியின் பந்துவீச்சை பட்லர் நாலா புறமும் சிதறடித்தார். பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி 55 ரன்கள் சேர்த்தது.

சஹாலின் சுழலில் ரஹானே வெளியேற ஸ்மித் களத்திற்கு வந்தார். பந்துகளை பாய்ந்து அடித்த பட்லர் அரைசதம் கண்டார். அதற்கு சிறிது நேரத்திலேயே அவர் அவுட் ஆக திரிபாதி ஸ்மித்துடன் சேர்ந்தார். 38 ரங்கள் சேர்த்த ஸ்மித் முகமது சிராஜ் பந்துவீச்சில் அவுட் ஆக ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.
இந்த இணை நிதானமாக ஆடி வெற்றியை நோக்கி அணியை நகர்த்தியது. 19.5 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
கோலிக்கு என்னதான் ஆச்சு?
ஐ.பி.எல் முடிந்த கையோடு உலகக்கோப்பை வர இருக்கிறது. இந்த நிலையில் கிங் கோலி சந்திக்கும் இந்த தொடர் தோல்விகள் அவரது கேப்டன்சி தகுதியை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது. அதிலும் சர்வதேச போட்டிகளில் அசாதாரணமாக பேட்டிங் செய்யும் கோலி ஐ.பி.எல் என்றாலே சொதப்பி விடுகிறார். அதிலும் ஸ்பின்னர்களிடம் கோலியின் பாச்சா பலிக்கவில்லை.
இந்தத் தொடரில் அனைத்துமே தோல்விகள். அதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன. என்னதான் ஓப்பனிங் 50 ரன்கள் எடுத்தாலும் அடுத்தடுத்து வரும் பெங்களூரு வீரர்கள் காலை வாரிவிடுகின்றனர். மிடில் ஆர்டர் அந்த அணி வீரர்கள் சோபிக்காமல் போவது வெற்றியை கடுமையாக பாதிக்கிறது.

கோலியின் வியூகங்களிலும் பல குறைபாடுகள் இருக்கின்றன. எந்த பேட்ஸ்மேனை எப்போது இறக்குவது? பந்துவீச்சை யாரிடம் அளிப்பது, எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பது என எதுவுமே கோலியால் முடிவு செய்ய முடியவில்லை. இது மனரீதியாக கோலிக்கு பலவீனத்தை அளிக்கும். இத்தனையும் தாண்டி, கோலி ஐ.பி.எல் தொடரில் சாதிப்பாரா? உலகக்கோப்பை என்ன ஆகும்? காத்திருக்கத்தான் வேண்டும்.