ஐபிஎல் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. குவாலிபயர் முதல் சுற்றில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விட்டது. எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, டெல்லி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது டெல்லி. இந்நிலையில் இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் மோத இருக்கும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டி இன்று இரவு விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால் ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. சரி, பழைய ரெக்கார்டுகளைப் புரட்டிப் பார்த்தால் சென்னையின் ஆதிக்கமே அதிகம் இருந்திருக்கிறது. இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 19 முறை டெல்லியை எதிர்கொண்டுள்ள சென்னை அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. டெல்லி வெறும் ஆறில் மட்டும்தான் தனது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. சென்னை அணியை கடைசியாக டெல்லி அணி தோற்கடித்தது கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் தான். இந்த வருடம் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலுமே சென்னை தான் வெற்றி வாகை சூடி இருக்கிறது. டெல்லி தரப்பில் ஷிக்கார்தவன், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் போன்றோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல் பவுலிங்கிலும் அமித் மிஸ்ரா சிறப்பாக பந்து வீசி வருகிறார். இது சென்னை அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கும்.
சென்னை அணியின் பலம் தான் என்ன?
போன தொடரில் ஓப்பனிங்கில் அதிரடி காட்டிய வாட்சன் மற்றும் ராயுடு ஆகிய இருவருமே இந்த சீசனில் பேட்டிங்கையே மறந்து விட்டனர். மிடில் ஆர்டரிலும் ரெய்னா, கேதார் ஜாதவ் ஆகியோர் சொதப்பி வருகின்றனர். ஜாதவிற்கு காயம் காரணமாக முரளி விஜய் அணியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியின் மீட்பராக இருந்து வழி நடத்தும் ஒரே ஆள் கேப்டன் தோனி மட்டுமே. எல்லா போட்டிகளிலுமே அவர் ஒருவரை நம்பி மட்டுமே சென்னை அணி களம் கண்டு வருகிறது. மற்ற பேட்ஸ்மென்கள் பொறுப்பான ஆட்டத்தை காட்டினால் மட்டுமே சென்னை அணி இம்முறை கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

பவுலிங்கைப் பொறுத்தவரை இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இறுதி ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பிராவோ ஓரளவுக்கு நன்றாகவே பந்துவீசி வருகிறார். இன்றைய போட்டியைப் பொறுத்தவரை சென்னை அணியின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று நம்பலாம். அதே சமயம் 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு டெல்லி அணி முதல் முறை பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ள டெல்லியும் கடுமையாகப் போராடும். ஆகவே இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என நம்பலாம்