இந்த வருட ஐ.பி.எல் ப்ளேஆப் சுற்றுகளுக்கான அணிகளின் போராட்டம் உச்சத்தை எட்டியுள்ளது. முதல் மூன்று இடங்களில் சென்னை, டெல்லி, மும்பை அணிகள் ஜம்மென்று உட்காந்திருக்க கடைசி மற்றும் நான்காவதாக வரப்போகும் அணி எது என்பதற்கான போட்டிகள் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளன. அந்த இடத்திற்கு மோதும் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் நேற்று களம் கண்டன. ஹைதராபாத்தில் நடந்த இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு’ செய்தார்.
வெளுத்துவாங்கிய வார்னர்
ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும் விருதிமான் சாஹாவும் களமிறங்கினர். வார்னர் வார்னர் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய இந்த அணி முதல் விக்கெட்டை இழந்தபோது 78 ரன்களை குவித்தது அந்த அணி. சாஹாவிற்குப் பிறகு வந்த பாண்டேவும் அதிரடி காட்டினார்.
பஞ்சாப் பவுலர்களை பிரித்தெடுத்தனர் இருவரும். அணியின் ஸ்கோர் 160 ஆக இருந்தபோது பாண்டே வெளியேற சிறப்பாக விளையாடி 81 ரன்கள் சேர்த்த வார்னரும் தனது விக்கெட்டைப் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் வந்த வில்லியம்சன், நபி ஆகியாரின் கடைசிகட்ட அதிரடியால் அணியின் ஸ்கோர் 212 ஆக உயர்ந்தது.
ஏமாற்றிய கெயில்
ஹைதராபாத்தின் இந்த இமாலய இலக்கை சேஸ் செய்ய கெயில் – ராகுல் இணை பேட்டிங்கிற்கு வந்தது. பாய்வார் என எதிர்பார்த்த கெயில் பணிந்துவிட்டார். 4 ரன்களில் வெளியேறி பஞ்சாப் ரசிகர்களின் ஆசையில் தீ வைத்தார். அடுத்துவந்த மயன்க் அகர்வால் 27 ரன்களில் டாடா காட்டினார். பூரன் 21 ரன்களில் கிளம்ப, மீட்பராக வந்த மில்லரை 11 ரன்களில் அவுட் ஆக்கினார் ரஷித் கான். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து போராடிய ராகுல் அரைசதம் கடந்தார். இவர் 79 ரன்களில் வெளியேறிய பின் வெற்றி ஹைதராபாத்தை நோக்கிச் சென்றது.

அடுத்துவந்த யாரும் ஹைதராபாத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வார்னருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.