ஐ.பி.எல் தொடரின் 13 வது போட்டியில் பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றமாக அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக அவேஷ் கான் சேர்க்கப்பட்டார். அதேநேரம், பஞ்சாப் அணியில் அதிரடி வீரர் கெய்ல் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக சாம் கரன் அணியில் இடம்பிடித்தார். இதேபோல் ஆண்ட்ரூ டைக்குப் பதிலாக முஜிபுகீர் ரஹ்மான் இடம்பிடித்தார்.

பஞ்சாப் பேட்டிங்
சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெயில் அணியில் இல்லாதது பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக இருக்கும் என பேசப்பட்டது. நடந்தது கிட்டத்தட்ட அதுதான். பஞ்சாப்பின் துவக்க ஆட்டக்காரர்களான ராகுல் மற்றும் கரன் இணை ஓப்பனிங்கில் சொதப்பியது. இரண்டாவது ஓவரில் ராகுலும் (11) நான்காவது ஓவரில் கரனும்(20) பெவிலியன் திரும்ப மயன்க் அகர்வாலும் (6) சோபிக்காமல் போனார். ஆனால் அடுத்து வந்த சர்ப்ராஸ் கான் (39) – டேவிட் மில்லர் (43) இணை சிறப்பாக விளையாடியது.
அடுத்து வந்த பஞ்சாப் வீரர்கள் ஏதோ தட்டுத்தடுமாறி ரன்கள் எடுத்து அந்த அணியின் ஸ்கோரை 166 ஆக உயர்த்தினர். பஞ்சாப் சார்பில் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும், ரபாடா, லாமிசான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
டெல்லி சேஸிங்
வெற்றிபெற 167 ரன்கள் தேவை என்ற இலக்குடன் டெல்லி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. முதல் ஓவரையே பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே பிரித்வி ஷா ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர் களத்திற்கு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் தவனுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.
7 வது ஓவரில் ஷ்ரேயாஸ் அவுட் ஆக, 9 வது ஓவரில் தவனும் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். 10 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 83 ரன்களை டெல்லி அணி எடுத்திருந்தது. டெல்லியின் ரிஷப் பண்ட் – இங்க்ரம் இணை சிறப்பாக விளையாடிய போதும் பாதியிலேயே ஏமாற்றம் அளித்து அவுட் ஆனார் பண்ட்.
17 வது ஓவர்
முகமது ஷமி வீசிய இந்த ஓவரில் இருந்துதான் மேட்ச் டெல்லி பக்கம் இருந்து பஞ்சாப் பக்கம் திரும்பியது. இந்த ஓவரில் ரிஷப் மற்றும் மோரிஸ் ஆகியோர் ஆட்டமிழக்க அணியின் விக்கெட் 5 ஆக இருந்தது. ஸ்கோர் 144.
சாம் கரன் வீசிய 18 வது ஓவரின் 4-வது பந்தில் இங்ராம் (38) ஆட்டமிழந்தார். அடுத்த வந்த படேல் ஒரு பந்து சந்தித்த நிலையில் அதே ஓவரின் கடைசிப்பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 148. டெல்லி அணி 4 ரன்களுக்குள் 4 விக்கெட்டைப் பறிகொடுத்தது.
ஷமியின் 19 வது ஓவரில் இந்த ஓவரின் 3-வது பந்தில் க்ளீன் போல்டாகி விஹாரி 2 ரன்களில் வெளியேறினார்.
மறுபடியும் கரன் 20 வது ஓவர் வீச வந்தார். அவர் வீசிய முதல் இரண்டு பந்துகளிலும் ரபாடாவையும், லாமிசாவைனையும் அவுட் ஆக்கி பஞ்சாபின் வெற்றியை உறுதி செய்தார். 19.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 14 ரன்களில் தோல்வி அடைந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. பஞ்சாப் அணித் தரப்பில் சாம் கரன் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஹாட்ரிக்
8-வது ஓவரின் கடைசிப்பந்தில் ஒருவிக்கெட்டும், அடுத்துதான் வீசிய 20ஓவரில் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை செய்தார் கரண். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.
டெல்லியின் ஸ்கோர் 144 ஆக இருந்த போது 4 விக்கெட்டுகள் மட்டுமே போயிருந்தது. அடுத்த 8 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி. அந்த அணியில் உள்ள 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனது தான் இத்தனை பெரிய தோல்விக்கு காரணம்.