ஐபிஎல் டி20 லீக்கின் 47 -வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை அணியை வெற்றிகொள்வது மிகச்சிரமமான காரியம். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தா அங்கு வெற்றி பெற்றதோடு சரி. அதன்பின் தொடர் தோல்விகள் தான். இதற்கு முடிவுகட்டும் நோக்கத்தோடு கொல்கத்தா அணி களமிறங்கியது.
தெறி பேட்டிங்
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய சுப்மன் கில் மற்றும் கிரிஸ் லின் ஆகியோர் இன்னிங்க்சைத் துவங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி தான் என்னும் தாரக மந்திரம் கொல்கத்தா அணியிரிடம் இருந்தது. கில் 76 ரன்களும், கிறிஸ் லின் 54 ரன்களும் எடுத்து வலுவான பேஸ்மட்டத்தை அமைத்துக்கொடுக்க பின்னர் வந்த ரஸ்ஸல் அதில் பங்களா கட்டினார். தினேஷ் கார்த்திக் மற்றும் ரஸ்ஸல் ஜோடி சேர்ந்து மும்பை பந்துவீச்சாளர்களை நோகடித்தனர்.
அதிலும் ரஸ்ஸல் ஆடு வெட்டும் பூசாரி போலவே ஆக்ரோஷமாக இருந்தார். நீ எப்படி வேனா போடு நான் சிக்ஸர் தா அடிப்பேன் என அசால்ட் காட்டினார் ரஸ்ஸல். நாற்பது பந்துகளை சந்தித்து 80 ரன்களை விளாசினார். இதன்மூலம் அந்த அணி 232 ரன்கள் குவித்தது.
ஆட்டத்தின் முடிவு தெரிந்துவிட்டாலும் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடவேண்டும் என்ற விதிமுறைப்படி மும்பை அணி சேஸிங்கிற்கு வந்தது. ரோஹித்தும் டீ காக்கும் வழக்கம்போல் ஓப்பனிங் இறங்கினர். ஓவருக்கு 13 ரன்கள் எடுக்கவேண்டும். ஆனால் டீ காக் டக்கில் வெளியேற அடுத்த சிறிது நேரத்திலேயே ஹிட் மேன் எல்.பி.டபிள்யு ஆனார். ஆனது அவுட் அப்பறம் ஏன் இந்த வேலை என்னும் படியாக நான் ஸ்ட்ரைக்கர் ஸ்டம்பை பேட்டால் தட்டிவிட்டு தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார் ஹிட் மேன்.
பழிக்குப்பழி பாகுபலி
பொல்லார்டும் ஹர்திக் பாண்டியாவும் களத்திற்கு வந்த உடனையே பியுஷ் சாவ்லாவை டக்கவுட்டிற்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் தினேஷ் கார்த்திக் அதை செய்யாமல் விட்ட வினை அவரை வைத்து செய்தது. 4 ஓவர்களில் அதிகபட்சமாக எத்தனை ரன்கள் கொடுக்க முடியும் என சாவ்லா பாடம் நடத்தினார். அரவுண்ட் த ஸ்டம்ப்ஸ் ல் இருந்து பாண்டியாவின் இடுப்பிற்கு பந்து வீசினால் சிக்ஸர் தான் என்று தெளிவாக தெரிந்திருந்தும் எல்லா பந்துகளையும் அப்படியே போட்டு எனக்கு தில்லு அதிகம் என கெத்து காட்டினார் சாவ்லா. எனக்கு அதைவிட தைரியம் அதிகம் என ஆட்டத்தின் கடைசி ஓவரையும் தூக்கி சாவ்லாவிற்கே கொடுத்து அசத்தினார் தினேஷ் கார்த்திக்.
வெற்றி என்னும் ஆப்ஷன் இல்லை என்ற நிலையில் மும்பை அணிக்கு உத்வேகம் அளித்தார் பாண்டியா. ஓவருக்கு இரண்டு சிக்ஸர். அதுவும் சாவ்லாவாக இருந்தால் மூன்று. கொல்கத்தா பவுலர்களை 232 என்னும் ஸ்கோர் தான் காப்பாற்றியது. சிங்கிள்ஸ் பக்கமே தலைகாட்டாமல் சிக்ஸர் பவுண்டரி என வெளுத்து 91 ரன்களை குவித்தார் பாண்டியா. அதுவும் 34 பந்துகளில். ஒருவழியாக எப்படியோ பாண்டியாவை கர்ணி அவுட் ஆக்கினார். கடைசியாக மும்பை அணியினால் 20 ஓவர் முடிவில் 198 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆகவே கொல்கத்தா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக ரஸ்ஸல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.