சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிய நேற்றைய ஆட்டத்தில் பாண்டியா சகோதரர்களின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி இந்தத் தொடரின் முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன்மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முதலில் 100 வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையை மும்பை அணி பெற்றுள்ளது.

ஓப்பனிங் நல்லாத்தான் இருந்துச்சு
டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த சென்னை அணியின் கேப்டன் தோனியின் வியூகம் ஆரம்பத்தில் மட்டுமே பலனளித்தது. ரோஹித் – டி காக் இணையை பவர்ப்ளேக்கு முன்பே பெவிலியன் அனுப்பிவைத்தனர் சஹாரும், ஜடேஜாவும். அடுத்துவந்த யுவராஜ் சிங்கும் சொற்ப ரன்னில் வெளியேற களத்திற்கு வந்தார் க்ருனால் பாண்டியா. சூரியகுமார் யாதவும் பாண்டியாவும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
![Screenshot 2019 04 04 Cricket scorecard MI vs CSK Mumbai Indians vs Chennai Super Kings 15th Match Indian Premier Leag... Cricket scorecard - MI vs CSK, Mumbai Indians vs Chennai Super Kings, 15th Match, Indian Premier Leag[...]](https://www.neotamil.com/wp-content/uploads/2019/04/Screenshot_2019-04-04-Cricket-scorecard-MI-vs-CSK-Mumbai-Indians-vs-Chennai-Super-Kings-15th-Match-Indian-Premier-Leag....png)
பந்தாடிய பாண்டியா
இந்தியாவின் மிகச்சிறந்த ஆள் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா வந்த வேகத்திலேயே சென்னையின் பந்துவீச்சைத் துவம்சம் செய்ய ஆரம்பித்தார். அவரோடு பொல்லார்டும் இணைந்து கொண்டதால் ஸ்கோர் கிடுகிடுவென உயர ஆரம்பித்தது.
கடைசி ஓவரைத் தூக்கி தோனி பிரவோவிடம் கொடுக்க, ஆட்டத்தின் விதியே மாறிப்போனது. ஒரு ஓவர். ஒரே ஓவர். 29 ரன்கள். இதில் நோ பால், ஒய்டு வேறு. சிக்ஸர் மழை முடிந்தபிறகு கணக்கெடுத்ததில் சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தேவையில்லாத ஆணி
ஏற்கனவே பேட்டிங்கில் ஒரு ஆள் குறைவு. இதில் ராயுடுவிற்கு எல்லாப்போட்டிகளிலும் வாய்ப்பு கொடுத்து சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொண்டது சென்னை. போன தொடரில் அடித்தார் என்ற ஒரே காரணத்திற்காக சென்னை அணி அவரைத் தூக்கி சுமக்கிறது. வாட்சனும் இதுவரை எதிலும் சோபிக்கவில்லை. இருவருமே நடையைக் கட்டினர்.
பின்னர் வந்த ரெய்னா சிறப்பாக துவங்கினாலும் போல்லார்டின் வெறித்தனமான கேட்சால் அவுட் ஆக தோனி களம் புகுந்தார். ஜாதவ் – தோனி இணை மெதுவாக விளையாடி ரன்னை உயர்த்தியது. பும்ரா, மலிங்கா, பாண்டியா என வரிசையாக பீரங்கித்தாக்குதல் நடத்திய மும்பை அணியிடம் தனது விக்கெட்டுகளைப் பறிகொடுத்துக்கொண்டே இருந்தது சென்னை.
](https://www.neotamil.com/wp-content/uploads/2019/04/Screenshot_2019-04-04-Cricket-scorecard-MI-vs-CSK-Mumbai-Indians-vs-Chennai-Super-Kings-15th-Match-Indian-Premier-Leag...1.png)
ஏன் தோல்வி?
சென்னையில் ஓப்பனிங் இந்த தொடரில் மகா மோசம். அதுவும் ராயுடு பேட்டிங்கை சுத்தமாக மறந்துவிட்டார். மும்பை மாதிரியான வலிமைவாய்ந்த அணியை சேஸ் செய்யும்போது நிதானம் அவசியம். குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது சென்னையை தோல்வி ஸ்டேசனில் இறக்கிவிட்டது.
பிராவோவின் கடைசி ஓவரும் மும்பையின் வெற்றிக்கு காரணம். ஆனால் ஐ.பி.எல் மாதிரியான போட்டிகளில் இப்படி நடப்பது சகஜம் தான். ஏனெனில் பிராவோ சென்னையின் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவர். ஆட்டத்தை கடைசி நேரத்தில் மாற்றும் திறமை அவரிடத்திடம் உண்டு. அதற்காவே அவர் இந்நேர வரையிலும் அணியில் தாக்குப்பிடிக்கிறார்.

ராயுடுவிற்குப் பதிலாக டு பிளேஸி அல்லது முரளி விஜய் அல்லது ஷோரே போன்றவர்கள் யாரையாவது எடுப்பது தான் சென்னையிடம் இருக்கும் ஒரே வழி. அதேபோல் தாக்கூருக்குப் பதிலாக இன்னும் ஒரு பேட்ஸ்மேனை உள்ளே கொண்டுவரவேண்டும்.
ஜாதவ், ரெய்னா, வாட்சன் போன்ற பார்ட் டைம் பவுலர்கள் இருக்கும் போது பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டயத்தில் உள்ளது சென்னை அணி.