தொடர் தோல்வியில் பெங்களூருவை இந்தியாவே கலாய்த்துக்கொண்டிருந்த நேரத்தில் நாங்களும் அப்படித்தான் என லிஸ்டில் சேர்ந்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐ.பி.எல் தொடரின் 43வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. தொடர்ந்து ஆறு தோல்விகளை சந்தித்ததால் இந்தப்போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நிலையில் கொல்கத்தா களம் இறங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து விச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிக்சைத் துவங்கிய கொல்கத்தா ஆரம்பம் முதலே தடுமாறியது. கிறிஸ் லின் முதல் ஓவரிலேயே வருண் ஆரோன் பந்தில் அவுட் ஆகினார். அடுத்தாக களம் இறங்கிய சுப்மன் கில் 14 ரன்னில் அதே வருண் ஆரோன் பந்தில் அவுட் ஆகி அதிரச்சி அளிக்க அதன் பின்னர் வந்த நிதிஷ் ராணா 21 ரன்னில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆக, இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் நிலைத்து விளையாடினார்.
காட்டடி ரஸ்ஸல் 14 ரன்களில் ஏமாற்ற தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து ஆடினார். டெத் ஓவர்களில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 97 ரன்களை குவித்தார். இதன்மூலம் அந்த அணி இருபது ஓவர் முடிவில் 175 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ரஹானே மற்றும் சாம்சன் இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். ரஹானே 32 ரன்னில் சுனில் நரைன் பந்தில் அவுட் ஆக, அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் 2 ரன்னில் அதே நரைன் சுழலில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். சாம்சன் 22 ரன்னில் சாவ்லா பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த ரீயான் பராக் நிலைத்து விளையாடினார். மறுமுனையில் விக்கெட்கள் சரிந்தது. பின்னி 11 ரன்னிலும் ஸ்டோக்ஸ் 11 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க பராக் மட்டும் சிறப்பாக விளையாடினார்.
கடைசி 5 ஓவர்களில் 54 ரன்கள் தேவைபட்ட நிலையில் பராக் மற்றும் ஆர்ச்சர் ஜோடி அதிரடியாக விளையாடியது. ரீயான் பராக் 47 ரன்னில் அவுட் ஆனார். ஆனாலும் ஆர்ச்சர் சிறப்பாக ஆடி வெற்றியை எட்டிப்பிடித்தார். இதன்மூலம் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக வருண் ஆரோன் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் கொல்கத்தா அணி பிளே-ஆப் செல்லும் வாய்ப்பு பறிபோனது.