இந்த வருட ஐ.பி.எல் தொடரில் தொடர் தோல்விகளை சந்திந்த பெங்களூரு அணி நேற்று சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தாவை எதிர்கொண்டது. தோல்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் என ரசிகர்களால் நம்பப்பட்ட பெங்களூரை சாய்த்தது கொல்கத்தா.

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். பெங்களூர் அணியில் ஹெட்மெயருக்குப் பதிலாக டிம் சவுத்தியும், உமேஷ் யாதவுக்குப் பதிலாக பவன் நெகியும் அணியில் இடம்பெற்றிருந்தனர். கொல்கத்தா அணியில் ஒரே ஒரு மாற்றமாக, நிகில் நாயக்கிற்குப் பதிலாக சுனில் நரேன் களமிறங்கினார்.
விளாசிய கோலி – டிவில்லியர்ஸ்
பேட்டிங் ஆட வந்த பார்த்திவ் படேல் – கோலி இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. பவர்ப்ளே முடிவில் இந்த ஜோடி 53 ரன்கள் குவித்தது. 8 வது ஓவரில் படேல் அவுட் ஆக களத்திற்கு வந்தார் டிவில்லியர்ஸ். அப்போதிலிருந்து கொல்கத்தாவின் பந்துவீச்சுகள் சிதறடிக்கப்பட்டன. 31 பந்துகளில் அரை சதமடித்த விராட் கோலி, 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிவிலியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இறுதி ஓவர்களில் ஸ்டோயினிக்ஸ் அதிரடி காட்ட, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.
கடின இலக்கு
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களத்திற்கு வந்தனர் கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்களான சுனில் நரேனும், கிரிஷ் லைனும். முதல் ஓவரின் 4-வது பந்திலேயே பவன் நெகியிடம் கேட்ச் கொடுத்து சுனில் நரேன் வெளியேற களத்திற்கு வந்தார் ராபின் உத்தப்பா. லின் மற்றும் உத்தப்பா இணைந்து பெங்களூரு பந்துவீச்சாளர்களை திறம்பட சமாளித்தார்கள். 9 வது ஓவரில் உத்தப்பாவும் தனது விக்கெட்டைப் பறிகொடுக்க சிறிது நேரத்திலேயே லின்னும் அவட் ஆனார்.

ஆகவே கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் ரானாவும் பேட்டிங்கைத் தொடங்கினர். சில ஓவர்களே இந்த இணை தாக்குப்பிடித்தது. சாஹலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார் ரானா. அடுத்த ஓவரே தினேஷ் கார்த்திக்கும் வெளியேறிய நிலையில், ரஸ்ஸல் மற்றும் கில் இணை 17 ஓவரில் கைகோர்த்தது.
ராட்சசன் ரஸ்ஸல்
எந்தப்பக்கம் போட்டாலும் சிக்ஸர் தான் என்று பேட்டைச் சுழற்றினார் ரஸ்ஸல். 13 பந்துகளை மட்டுமே சந்தித்த இவர் 7 சிக்ஸர் மூலம் 48 ரன்களைக் குவித்தார். இதனால் 19 வது ஓவரிலேயே கொல்கத்தா வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டம் காரணமாக ரஸ்ஸலுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

பின்னர் பேசிய கோலி எல்லா யுக்திகளையும் செய்துவிட்டோம். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று உருக்கமாக பேசினார். தொடர் தோல்விகளில் இருந்து மீள அந்த அணிக்கு கிடைத்த வாய்ப்பும் பறிபோனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.