ஐ.பி.எல் தொடரின் 32-வது லீக் ஆட்டமானது நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஸ்டீவன் ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், கே.கவுதம் ஆகியோருக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பின்னி, சோதி மற்றும் அறிமுக வீரராக ஆஷ்டன் டர்னர் ஆகியோர் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தனர். பஞ்சாப் அணியில் சாம் கரன், சர்ப்ராஸ் கான், ஆண்ட்ரூ டை ஆகியோருக்கு பதிலாக டேவிட் மில்லர், முஜீப் ரகுமான், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பிடித்தனர்.
டாஸில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து களத்திற்கு வந்தார்கள் பஞ்சாபின் துவக்க ஆட்டக்காரர்களான கெயில் மற்றும் ராகுல். சிக்ஸர் அடி மன்னன் கெயில் (30) உனாட்கட் ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டாலும், ஆறாவது ஓவரில் ஆர்ச்சரின் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் 26 ரன்களுடன் வெளியேற, மில்லர் பேட்டிங் செய்ய வந்தார்.
பேட்டில் படுவது எல்லாம் அவனவன் செய்த வினை என ஆடிக்கொண்டிருந்த ராகுல், மில்லரின் வருகைக்குப் பின்னர் ஸ்கோரை உயர்த்தத் தொடங்கினார். சோதி, உனாட்கட் என யாராக இருந்தாலும் அடிப்பது என மில்லர் சபதம் எடுத்தபோது ராகுல் (52) பெவிலியன் போய்விட்டார். அடுத்துவந்த நிகோலஸ் பூரன் மற்றும் மந்தீப் சிங் காலில் வெந்நீரை ஊற்றியது போல் ஆடி அவுட்டாக பஞ்சாப் அணி தடுமாறியது. கடைசி ஓவரில் எதாவது சிக்ஸர் அடிப்பார்கள் என எதிர்பார்த்திருந்த வேளையில் அவுட் ஆகி ஏமாற்றினார் மில்லர் (40). கடைசி நேர அதிரடியாக அஷ்வின் இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியை பறக்கவிட்டு ஸ்கோரை 182 ஆக உயர்த்தினார். இப்படியான பேட்டிங்கிலும் வெறும் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஆர்ச்சர்.
பாய்ந்த பட்லர்
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பட்லர் மற்றும் ராகுல் த்ருபாதி ஆகியோர் இன்னிங்க்சைத் தொடங்கினர். பஞ்சாப் அணியில் புதிதாக சேர்க்கப்பட்ட அர்ஷ்தீப் ஓவரில் பட்லர் மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸரைத் தெரிக்கவிட்டார். நல்ல பார்மில் இருந்த பட்லரை (23) பாய்ந்தது போதும் என அர்ஷ்தீப் சிங் அவுட் ஆக்கினார். அடுத்து சஞ்சு சாம்சனும், ராகுல் த்ரிபாதியும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இந்த இணையை அஷ்வின் பிரித்தார். சாம்சன் 27 ரன்னில் வெளியேற அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியத் தொடங்கின.

அதுவரை நன்றாக ஆடிக்கொண்டிருந்த த்ரிபாதி 50 ரன்னோடு வெளியேறினார். டர்னர் டக்கிலும், ஆர்ச்சர் 1 ரன்னிலும் வெளியேற கேப்டன் ரஹானே, அணி எவ்வழியோ நானும் அவ்வழி என 23 ரன்னில் சீட்டுக்கு போய்விட்டார். கடைசி ஓவரில் 23 ரன் எடுக்கவேண்டும். பேட்ஸ்மேன் எல்லோரும் டக்கவுட்டில் இருக்க யார் அடிப்பது? அந்த அணி இருபது ஓவரில் 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.