கொல்கத்தா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் முதல் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்த பஞ்சாப் கொல்கத்தா பேட்டிங்கில் மிரண்டுபோனது. கொல்கத்தா அணி அதிக ரன்கள் குவிக்கக் காரணமாக இருந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் மூன்று ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி பந்தில் போல்ட் ஆனார். பஞ்சாப் வீரர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்க கொஞ்சம் பொறுங்க தம்பி இது நோ பால் என்று கை தூக்கினார் நடுவர். அப்போதே ஆட்டத்தின் ரிசல்ட் பாதிபெருக்குத் தெரிந்திருந்தது.
தெறிக்கவிட்ட கொல்கத்தா
கிரிஸ் லின் 10 ரன்னில் அவுட் ஆனாலும் சுனில் நரைன் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின்பு ஜோடி சேர்ந்த உத்தப்பா (67 ) – ராணா (63) இணை பஞ்சாப்பை பந்தாடியது. அடிச்சா சிக்ஸர் மட்டும் தான் என சத்தியம் செய்துவிட்டு மேட்சிற்கு வந்திருந்தார் ராணா. ஸ்டம்பிற்கு வெளியே, உள்ளே, நடுவே என மாற்றி மாற்றி பந்து வீசினாலும் விடை ஆறு தான். உத்தப்பாவும் ராணாவின் வழிலேயே அடிக்கத் தொடங்கினார். ராணாவின் பெவிலியன் பயணத்தைத் தொடர்ந்து கிரீசிற்கு வந்தார் ஆண்ட்ரே ரஸ்ஸல்.

அஷ்வினால் வந்த வினை
முகமது ஷமி ஓவரில் மூன்று ரன்களுடன் நின்ற ரஸ்ஸல் கிளீன் போல்டு ஆனார். ஆனால் நடுவர் நோ பால் என்று அறிவித்தார். இதில் ஷமியின் தவறு ஏதும் இல்லை. ஆமாம். அது கிரீஸ் நோ பால் இல்லை. பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேலேயும் போகவில்லை. 30 யார்டு வளையத்திற்குள் 3 வீரர்களையே வைத்திருந்ததால் வந்த வினை அது.
ரஸ்ஸலை அப்போதே பெவிலியனுக்கு அனுப்பியிருக்கலாம். அஷ்வின் செய்த பிழையால் சுதாரித்துக்கொண்டார் ரஸ்ஸல். ருத்ர தாண்டவம் ஆடினார் ரஸ்ஸல். 17 பால்களில் 48 ரன்களை அவர் விளாசித்தள்ள அணியின் ஸ்கோர் 218 ஆனது.
கெயிலே கதி
இத்தனை பெரிய ஸ்கோரை சேஸ் செய்யவேண்டுமென்றால் பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர் கெயில் தனது பேட்டால் ஏதாவது வித்தை காட்டியே தீரவேண்டும் என்ற நிலையில் 20 ரன்களில் டாடா காட்டினார் கெயில். அத்தோடு மேட்ச் முடிந்தது என நினைக்கும் நேரத்தில் மயங்க் அகர்வால் (58), டேவிட் மில்லர் (59), மந்தீப் சிங் (33) ஆகியோர் சிறப்பாக விளையாடி நெருக்கடியை சமாளித்தனர்.
கொல்கத்தா பவுலர்களும் பெட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கவே பஞ்சாப்பால் 20 ஓவர் முடிவில் 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பேட்டிங்கில் சிதறடித்த ரஸ்ஸல் பவுலிங்கிலும் கலக்கினார். இரண்டு விக்கெட்டுகளை வர கைப்பற்றினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.

அஷ்வினின் அந்த முடிவு சரியாக இருந்திருந்தால் கொல்கத்தா அணியை 200 ரன்களுக்குள் சுருட்டியிருக்கலாம். என பஞ்சாப் அணி ரசிகர்கள் முகநூல் பக்கம் முகம் சிவந்துபோய் காணப்படுகிறார்கள்.