இந்த வருட ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகளைத் தேர்வு செய்யும் குவாலிபயர் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. நேற்று நடந்த இரண்டாவது எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியும் டெல்லி அணியும் மோதின. இதில் வெற்றி பெற்று 12 வருடங்களுக்குப் பிறகு டெல்லி அணியின் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. விசாகப்பட்டினத்தில் நடந்த இப்போட்டியில் ஹைதராபாத் கைக்குள் பத்திரமாக இருந்த வெற்றியை பாசில் தம்பி ஒரு ஓவரின் மூலமாக தட்டிப் பறித்து டெல்லியிடம் கொடுத்துவிட்டார். இதனால் டெல்லி ரசிகர்கள் அனைவரும் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என கொண்டாடி வருகிறார்கள்.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 5628 ஆவது தடவையாக பவுலிங்கைத் தேர்வு செய்தார் இதனையடுத்து ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான விருதிமான் சாஹாவும் மார்டின் கப்திலும் களமிறங்கினர். சாகா 8 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தாலும், அடுத்து வந்த மணீஷ் பாண்டே ஹைதராபாத் ரசிகர்களுக்கு ஆதரவளித்தார். மற்றொரு புறம் இருந்த கப்தில் இஷாந்த் சர்மாவின் பந்தை இரண்டாம் மாடிக்கு அனுப்பி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அணியை சரிவிலிருந்து மீட்ட இந்த இணையை அமித் மிஸ்ரா பிரித்தார். 36 ரன்களுடன் கப்தில் வெளியேற மணிஷ் பாண்டே 30 ரன்களில் வெளியேறினார். ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் தனது பொறுப்பான ஆட்டத்தினால் 28 ரன்கள் சேர்த்து இஷாந்த் சர்மாவின் பந்தில் வெளியேறினார். ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் இரண்டு பவுண்டரி 2 சிக்சர்கள் என கடைசி நேரத்தில் விளாசி 25 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். நபி தன் பங்கிற்கு 20 ரன்கள் எடுக்க, 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 162 ரன்கள் எடுத்திருந்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் களம் கண்டனர். இந்தத் தொடரில் பெரிதாக சோபிக்காத ப்ரித்வி ஷா இன்னிக்கு இருக்கு கச்சேரி என்ற மூடில் ஆடினார். முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளுடன் தனது கணக்கை ஆரம்பித்த தவன் 17 ரன்களுடன் ஆட்டத்தை முடித்துக் கொண்டார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு ஒரு மினி ஹார்ட் அட்டாக் கொடுத்தார். ஆனால் ரிஷப் பண்ட், நான் இருக்கேன் யாரும் பயப்படாதீர்கள் என்று தனது பேட்டால் தெரிவித்தார். ஷா – பண்ட் இணை சிறப்பாக ஆடியது. அரைசதம் கடந்த ஷா விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பின் வந்தவர் காலின் மன்றோ. ஒருபுறம் ரிஷப் பண்ட் ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை தெறிக்க விட மன்றோ மறுமுனையில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து வெற்றிக்கான வாய்க்காலை பேட்டால் வெட்டினார்.” நான் இருக்கும்போது அதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா” என ரஷித் கான் பந்து வீச வந்தார். பதினான்காவது ஓவரை வீசிய ரஷீத் மன்றோ மற்றும் அக்ஷர் பட்டேலை அவுட்டாக்கி போட்டி ஐதராபாத் அணியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். முதல் 2 ஓவர்களில் ரன்களை வாரி வழங்கிய புவனேஸ்வர் குமார் 17 வது ஓவரை அருமையாக வீசி டில்லிக்கு டஃப் கொடுத்தார். கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் 18-வது ஓவரை வீச பாஸில் தம்பியை அழைத்தார் வில்லியம்சன். அப்போது கலீல் அகமதிற்கு இரண்டு ஓவர்களும், புவனேஷ்வர் குமாருக்கு ஒரு ஓவரும் மீதம் இருந்தன. ஆனால் நான் தம்பிக்கு தான் கொடுப்பேன் என ஒற்றைக்காலில் நின்று சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டார் வில்லியம்சன். விளைவு விபரீதமாக இருந்தது. தம்பி வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கினார் ரிஷப் பண்ட். அடுத்த பந்தை மிட்விக்கெட்டில் விளாசி அடுத்த ஆறு ரன்களை எடுத்துக் கொண்டார். அடுத்த பந்தில் பவுண்டரி ஆக மொத்தம் இருபத்தி ஒரு ரன்களை வாரி வழங்கி டெல்லியின் வாய்ப்பை உறுதி செய்தார் தம்பி.

ஆனால் அடுத்து ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் ரூதர்போர்ட் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பி இன்னும் மேட்ச் முடியல என்று கெத்து காட்டினார். அந்த ஓவரில் புவனேஸ்வர் குமார் எட்டு ரன்களை கொடுத்திருந்ததால் கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
எப்படியோ ப்ளே ஆப் வரைக்கும் வந்துட்டோம் நீதான் காப்பாத்தணும் என கலீல் அகமதிடம் பந்தை கொடுத்தார் வில்லியம்சன். முதல் பந்துக்கு நடுவர் டைட்டானிக் போஸில் நிற்க வைடு என அறிவிக்கப்பட்டது. அடுத்து இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே வந்து ரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது. மூன்றாவது பந்தில் கீமா பால் சிங்கிள் எடுத்து அமித் மிஸ்ராவிடம் ஸ்டரைக் கொடுத்தார்.

அடுத்த பந்தை அடிக்க முடியவில்லை சரி ஒருவனாவது எடுப்போம் என்ற ஆசையில் ஓடினார் மிஸ்ரா. விக்கெட் கீப்பர் சாகா பந்தை அகமதுவிடம் பாஸ் செய்ய அவர் மிஸ்ராவை அவுட்டாக்க ஸ்டம்பை நோக்கி எறிந்தார். ஆனால் மிஸ்ரா எங்க முடிஞ்சா எறிஞ்சு பாரு என்ற நிலையில் முழு ஸ்டம்புகளையும் மறைத்த வாக்கில் ஓடிக்கொண்டிருந்தார். இவர் குறுக்க குறுக்க வர்றாரு யுவர் ஆனர் என நடுவரிடம் முறையிட்டனர் ஹைதராபாத் வீரர்கள். ஆமாமா அது தப்புதான் நீங்க அவுட் மிஸ்ரா என்று அம்பையர் கையை தூக்க வயிற்றுக்குள் ஏதோ ஊர்வது போன்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டது. மேட்ச் சூப்பர் ஓவருக்கு செல்லும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் பால் மிட் விக்கெட் திசையில் பவுண்டரியை தெறிக்க விட்டு அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் முதல் 12 வருடங்களுக்கு பிறகு டெல்லி அணி பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ரிஷப் பண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் மோதப் போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டி நாளை டெல்லி மற்றும் சென்னை அணி இடையே நடக்க இருக்கிறது