ஐ.பி.எல் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பௌலிங்கைத் தேர்வு செய்தார். சென்னை அணியின் சார்பில் ஹர்பஜன் மற்றும் கூகலின் நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக சான்ட்னர் மற்றும் தாக்கூர் சேர்க்கப்பட்டனர். இதேபோல் ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், உனட்கட் ஆகியோருடன் 17 வயதே ஆகும் ரியான் பராக் என்னும் இளைஞரும் புதுமுகமாகக் களமிறங்கினார்.
புஸ்வானம்
பட்லரும், ரஹானேவும் அதிரடியாய் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆனால் தேவையில்லாத ஷாட்களால் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். சஞ்சு சாம்சன், ஸ்மித், திரிபாதி ஆகியோர் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆக அடுத்து வந்த ஸ்டோக்ஸ் தடவித்தடவி 28 ரன்கள் சேர்த்தார். பின்னர் கடைசி கட்டத்தில் ஸ்ரேயாஸ் கோபால் அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. துவக்கத்தில் அணுகுண்டாய் வெடிக்கும் என நினைத்திருந்த ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் கடைசியில் புஸ்வாணமானது. சென்னை அணி தரப்பில் ஜடேஜா, தாகூர், சஹார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.
பரிதாபம்
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வாட்சனும், டுபிளேசியும் களம் இறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இணை ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. குல்கர்னி வீசிய முதல் ஓவரிலேயே வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
டூபிளிஸிஸ் ஏழு ரன்களிலும், சுரேஷ் ரெய்னா 4 ரன்களிலும், ஜாதவ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்த விக்கெட் இழப்பால் சென்னை அணி தடுமாறியது. பின்னர், அம்பதி ராயுடு, தோனி ஜோடி டீமை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் எதிரணியின் பந்து வீச்சை சிதறடித்தனர்.
சென்னை அணியின் ஸ்கோர் 119 ஆக இருந்த நேரத்தில் ராயுடு அவுட் ஆனார். அப்போது ஆரம்பித்த பதட்டம் ஆட்டம் முடியும்வரை குறையவில்லை. பேட்டிங் செய்ய வந்த ஜடேஜா தோனியுடன் இணைந்து நிலைமையை சமாளித்தார்.
கடைசி ஓவர்
கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை. முதல் பந்திலே சிக்ஸர் அடித்து அமர்க்களப்படுத்தினார் ஜடேஜா. அடுத்த பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. அது நோ பாலாக அமைய ஃப்ரீ ஹிட்டில் தோனி இரண்டு ரன் எடுத்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய சான்ட்னர், ஃபுல் டாஸாக வந்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அப்போது முதல் நடுவர் நோ – பால் என கையைத் தூக்கினார். பின்னர் ஸ்கொயர் அம்பையர் நோ பால் இல்லை எனச் சொல்ல நோ பால் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் மைதானத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டது.
கடுப்பான தோனி
களத்தில் இருந்த ஜடேஜா நடுவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதே கூல் கேப்டன் தோனி கோபமடைந்து மைதானத்திற்கு உள்ளே வந்தார்.
நீங்கள் ஏன் முதலில் நோ பால் கொடுத்தீர்கள்? என நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தோனியின் கோபம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால் கடைசி வரை நான் கொடுக்க மாட்டேன் என நடுவர் சாதித்து விட்டார்.
கடைசிப்பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் சான்ட்னர் லாங் ஆன் திசையில் சிக்ஸரை பறக்கவிட்டு சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணிக்கு 100 வது வெற்றியாக இது அமைந்தது. அணியை சரிவிலிருந்து மீட்ட தோனிக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.