ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நேற்று சென்னை – கொல்கத்தா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ரஸ்ஸலின் காட்டடியிலிருந்து தப்பிக்குமா சென்னை என பேசப்பட்டுவந்த நிலையில் இது எங்க ஏரியா என மறுபடியும் மார்தட்டியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் தோனி டாஸ் வென்று கொல்கத்தாவை பேட்டிங் செய்யுமாறு பணித்தார்.

எனவே சுனில் நரைனும், கிறிஸ் லின்னும் ஓப்பனிங் இறங்கினார்கள். சஹார் வீசிய முதல் ஓவரின் கடைசிப்பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் லின் வெளியேறினார். அடுத்த ஓவரை ஹர்பஜனிடம் கொடுத்தார் தோனி. அதிரடி வீரரான நரேன் அந்த ஓவரில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்துவந்த ராபின் உத்தப்பாவும் அதிக நேரம் கிரீஸில் நிலைக்கவில்லை. ராணாவின் அக்கவுண்ட் ஓப்பன் ஆவதற்கு முன்னே அவர் வெளியேறினார். மற்றொரு புறத்தில் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் 19 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பிறகு கொல்கத்தாவின் நம்பிக்கை நட்சத்திரம் ரஸ்ஸல் களமிறங்கினார். அவருடன் பியூஷ் சாவ்லா இணைய ஸ்கோர் கொஞ்சம் ஏறியது. ரஸ்ஸலை தாகீரை வைத்து அவுட் ஆக்க நினைந்த தோனியின் எண்ணம் சரியாக அமைந்தது. ஆனால் ஹர்பஜனுக்கு கேட்ச் சரியாக அமையவில்லை. அதனால் 80 ரன்னில் முடியவேண்டிய கொல்கத்தாவின் ஸ்கோர் 108 ஆனது.
சுழலில் சிக்கிய சூறாவளி
இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸல் நிதானமாக ஆடி 50 ரன்கள் எடுத்தார். அதுவும் 45 பந்துகளில். ஆரம்பம் முதலே சென்னை அணியின் பவுலர்கள் ரஸ்ஸலுக்கு நெருக்கடி கொடுத்துவந்தனர். மேலும் கையில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் ஸ்கோர் சேர்ப்பதில் அவரால் ஈடுபடமுடியவில்லை. இறுதியாக 20 ஓவர் முடிவில் 108 ரன்களை மட்டுமே அந்த அணியினால் எடுக்க முடிந்தது.

எளிய இலக்கு
சென்ற மேட்சில் கலக்கிய டுபிளேசி இந்த ஆட்டத்திலும் தனது நிதானத்தை வெளிப்படுத்தினார். மற்றொரு புறம் ஷேன் வாட்சன் அதிரடியாக ஆரம்பித்தாலும், 17 ரன்களில் சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து அனர் அவுட் ஆனார். அடுத்துவந்த ரெய்னா சிக்சரில் ஆரம்பித்து உற்சாகம் ஏற்றினாலும் 14 ரன்களில் நடையைக் கட்டினார். அணையில் ஏன் இருக்கிறார் என்று தெரியாமல் இருக்கும் ராயுடு 31 பந்துகளில் 21 ரன்களை குருவி சேர்க்கிறார் போல் சேர்த்து அவுட் ஆக, இறுதியாக ஜாதவ் களத்திற்கு வந்தார். யார் வந்தாலும் போனாலும் என் ஆட்டத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று டுபிளேசி ஆடிக்கொண்டிருந்தார்.

17.2 ஓவரில் சென்னை அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அபாரமாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சஹார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் சென்னை அணி பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
பின்னர் பேசிய தோனி சென்னை அணியுடன் மக்கள் பாராட்டும் அன்பு அலாதியானது. அவர்கள் எண்ணை மனதளவில் ஏற்றுக்கொண்டுவிட்டனர் எனத் தெரிவிக்க கூட்டம் ஆர்ப்பரித்தது. சென்னை ரசிகர்கள் இந்த வெற்றியினை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.