ஐ.பி.எல் தொடரின் 18 வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்று சேப்பாக்கத்தில் மோதின. டாஸ் வென்ற சென்னை பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து களத்திற்கு வந்தது டுபிளெஸ்ஸி – வாட்சன் இணை. இந்த வருட தொடரில் எதிலும் துவக்க ஆட்டத்தில் சொதப்பிய ராயுடுவை ஒப்பனிங்கில் அனுப்பவில்லை. அதுசரிதான் என்று நிரூபித்தார் டுபிளெஸ்ஸி. முதல் இரண்டு ஓவர்களில் நிதானமாக ஆடிய சென்னை வீரர்கள் ஆன்ட்ரூவ் டை ஓவரில் வெளுக்கத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய வாட்சன் அஷ்வின் ஓவரில் அவுட் ஆகி வெளியேற ரெய்னா களத்திற்கு வந்தார்.
பட்டா பாக்கியம் என்று ஆடிய ரெய்னாவை ஒரு புறத்தில் வைத்துக்கொண்டு அடுத்த புறத்தில் நின்ற டுபிளெஸ்ஸி அதிரடி காட்டினார். 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த டுபிளெஸ்ஸி அஷ்வின் பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற அடுத்த பந்திலேயே ரெய்னா கிளீன் போல்டானார்.
முதல் ஐந்து ஓவரில் புலியாய் பாய்ந்த சென்னை அணி அடுத்து ஆமையாய் ஊர ஆரம்பித்தது.
மிரட்டிய தோனி
குறிப்பாக சூழல் பந்தில் சென்னை பேட்ஸ்மேன்கள் எதுவுமே செய்யமுடியாமல் தவித்தனர். ஆனால் கடைசியில் டோனி பேட்டிங்கிற்கு வந்தவுடன் நிலைமை தலைகீழாக மாறியது. டெல்லி அணியுடன் மிரட்டிய சாம் கரனின் பந்தை அனாயசமாக வெளுத்தார் தோனி. கடைசி இரண்டு ஓவர்களில் பழைய தோனியை பார்க்க முடிந்தது. அதே சமயம் இந்த ஆட்டத்தில் நான்காவது இறங்கிய ராயுடு ஓரளவு சாமாளித்து ஆடினார். இருபது ஓவர் முடிவில் சென்னை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. மூன்று விக்கெட்டுகளையுமே அஷ்வின் கைப்பற்றினார்.
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி சேஸிங்கைத் தொடங்கியது. சிக்ஸர் மன்னன் கெயிலும் ராகுலும் ஒப்பனர்களாக இறங்கினர். முதல் ஓவரில் சஹார் டஃப் கொடுக்க அடுத்த ஓவர் வீச வந்தார் வள்ளுவர் ஹர்பஜன்.
பஞ்சாபின் நம்பிக்கை நட்சத்திரமான கெயிலை ஓவரின் நான்காவது பந்தில் அவுட் ஆக்கி அசத்தினார் ஹர்பஜன். அந்த அணிக்கு அடுத்த அதிர்ச்சியை கடைசிப் பந்தில் கொடுத்தார் ஹர்பஜன். கெயிலுக்கு அடுத்து வந்த மயங் அகர்வால் தேவையில்லாமல் சிக்ஸர் அடிக்க முயன்று டுபிளெஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதனையடுத்து சர்பராஸ் கான் கிரீஸிற்கு வந்தார். ராகுல் – சர்பராஸ் இணை நிதானமாக விளையாடியது. இம்ரான் தாஹீரின் ஓவரில் எல்.பி.டபிள்யு வாய்ப்பு கிடைத்தாலும் சென்னை ரிவியூ போகவில்லை. இதற்கான விலையை அவர்கள் பின்னர் கொடுக்கவேண்டியிருந்தது. ராகுலும் சர்பராசும் அரை சதம் கண்டனர்.
பக் பக் …
கடைசி மூன்று ஓவரில் 48 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் ராகுல் அவுட் ஆக மில்லர் பேட்டோடு வந்தார். இதனால் ரசிகர்களுக்கிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது. 19 வது ஓவரை வீச வந்தவர் சஹார். 12 பந்துகளுக்கு 39 ரன்கள் அடிக்கவேண்டும் என்னும் பயத்தில் இருந்த பேட்ஸ்மேன்களை சஹாரின் அடுத்தடுத்த நோ பால்கள் உற்சாகமேற்றின.
ஓவரின் நடுவே தோனி அறிவுரைகளை வழங்க மில்லரின் ஸ்டம்புகளை சிதறடித்தார் சஹார். கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் குஜலின் பந்துவீச வந்தார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் சர்பராஸ் டுபிளேஸியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக ஒருவழியாக இருபது ஓவர் முடிவுக்கு வந்தது. பஞ்சாப் அணியினால் 138 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியாக சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.