கிரிக்கெட் என்ற வார்த்தை தெரிந்த எல்லோருக்கும் பிராட்மேனை நிச்சயம் தெரிந்திருக்கும். டொனால்டு பிராட்மேன்(Donald Bradman) இறந்து 17 வருடங்கள் கடந்தும் அவருடைய பல சாதனைகள் இன்றும் முறியடிக்கப்படாமலேயே இருக்கின்றன. இன்று பிராட்மேனின் 110 – வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி கூகுள் (Google) தனது முகப்புத்திரையில் பிராட்மேனின் உருவத்தை டூடுலாக(Doodle) வெளியிட்டுள்ளது.

பிராட்மேன் தனது 20 – வது வயதில், ஆஸ்திரேலிய அணிக்காக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக களமிறங்கினார். பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லாத அன்றைய கிரிக்கெட்டில், பவுலர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கிய பிராட்மேனைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைக் கீழே காணலாம்.
- பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் தான் பிராட்மேன் தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார். அப்போது அவருக்கு வயது 12 மட்டுமே.
- டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை இவரது பேட்டிங் சராசரி 99.94 ஆகும். கிரிக்கெட் வரலாற்றின் அதிகபட்ச தனிநபர் சராசரியும் இதுதான். 80 இன்னிங்ஸ்களில் 6,996 ரன்களைக் குவித்ததன் மூலம் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிராட்மேன்.
- டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் அதிக ரன்களை எடுத்த பெருமையும் பிராட்மேனையேச் சாரும். 1930 – ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது இவர் அடித்த 309 ரன்களே இன்று வரை சாதனையாக இருக்கிறது.
- ஒரே அணிக்கு எதிராக விளையாடி அதிக ரன் சேர்த்ததும் பிராட்மேன் தான். இங்கிலாந்துடன் இவர் அடித்த மொத்த ரன்களின் எண்ணிக்கை 5028 ஆகும்.
- சித் பார்னெஸ் (Sid Barnes) உடன் இணைந்து இவர் குவித்த 405 ரன்களே அதிகபட்சமாக ஐந்தாவது விக்கெட்டிற்கு எடுக்கப்பட்ட ரன்கள் ஆகும்.
- 80 இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் பிராட்மேன் மொத்தம் 6 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார். (இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து சிக்ஸர்களும், இந்தியாவுக்கு எதிராக ஒன்றும்) மாறாக 618 பவுண்டரிகளை விளாசித் தள்ளியிருக்கிறார்.
- பிராட்மேன் தான் விளையாண்ட எந்தப் போட்டியிலும் போல்ட் ஆனதில்லை.
- பிராட்மேனுக்கு இங்கிலாந்து என்றால் மிகவும் பிடிக்கும் போலிருக்கிறது. தனது முதல் போட்டியை இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில்(1928) தான் துவங்கினார். 20 வருடங்கள் ஓயாமல் உழைத்த அந்த ரன் மிஷின் 1948-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. கடைசிப் போட்டியும் இங்கிலாந்துடன் தான்.
- 99.96 சராசரியைக் கொண்டிருந்த பிராட்மேன் தனது கடைசி ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமலேயே வெளியேறினார்.
- கடைசிப் போட்டியில் 4 ரன்கள் எடுத்திருந்தால் அவரது சராசரி 100 ஆக இருந்திருக்கும். ஆனால் அவர் சுழியத்தில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.
- டெஸ்ட் தொடர்களில் 7 முறை 500 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனையை முதலில் நிகழ்த்தியவர் இவரே. (பின்னாளில் மேற்கு இந்தியத் தீவின் பிரியான் லாரா(Brian lara) அச்சாதனயை சமன் செய்தார்.)
- இப்படி எண்ணற்ற சாதனையைப் படைத்த பிராட்மேனிற்கு 1949 – ல் மிக உயர்ந்த விருதான நைட்ஹூட் (Knight hood)விருது வழங்கப்பட்டது.
- இருபது ஆண்டுகளே விளையாடினாலும் பிராட்மேன் ஒரு நூற்றாண்டு வீரர். இன்னும் அவரது பல சாதனைகள் யாராலும் நெருங்கவே முடியாத உயரத்தில் உள்ளது. அதுவே அவரது புகழுக்குச் சான்றாகவும் இருக்கிறது.