சிங்கத்தை அதன் குகையினில் சந்திப்பது என்று சொல்வார்கள் அல்லவா? அதன் உண்மையான அர்த்தம் இன்று தான் தெரியவந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றிருக்கிறது இந்தியா. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர், T20, ஒருநாள் போட்டிகள் கொண்ட ஆலன் பார்டர் – கவாஸ்கர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்தியா அதே உத்வேகத்துடன் ஒருநாள் தொடரை எதிர்கொண்டது. ஆனால் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தாலும், இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றிபெற்று தொடரை பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்த்தியது.

இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று துவங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியினை ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் திணறச் செய்தனர். அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இறுதியாக 48.4 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா 230 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதிகபட்சமாக ஹென்ஸ்கோம்ப் 58 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்திய அணி கதகளியே ஆடியது எனச் சொல்லலாம். குறிப்பாக சஹாலின் பந்துவீச்சின் வீச்சு 6 விக்கெட்டுகளை காலி செய்தது. முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்தியா பேட்டிங்
ஆஸி.யைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் வெற்றியை நோக்கி மெல்ல திசை திரும்பியது. துவக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோஹித் ஆகியோர் பேட்டிங்கில் சொதப்பினாலும் அடுத்து களமிறங்கிய கோலியும் தோனியும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் 46 ரன்களுடன் கோலி ஆட்டமிழக்க, களத்திற்கு வந்தார் ஜாதவ். ஆஸ்திரேலிய அணி பவுலர்களின் பந்துவீச்சால் இந்த இருவரின் விக்கெட்டை கடைசிவரை கைப்பற்ற முடியவில்லை.

தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் அரைசதம் (87) எடுத்து தோனி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்தமுறை வாய்ப்பளிக்கப்பட்ட ஜாதவும் சிறப்பாக விளையாடி 61 ரன்களை எடுத்தார். இறுதியாக வெற்றி இலக்கை நான்கு பந்துகள் மிச்சமிருந்த நிலையில் எட்டியது இந்தியா. இதன்மூலம் ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை புரிந்திருக்கிறது கோலி தலைமையிலான இந்திய அணி. 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சஹால் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்தடுத்த அரைசதம் எடுத்து “பழைய தோனி பராக்” என்று அறிவித்த தோனிக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.
பாயும் புலி’
மழை காரணமாக T20 தொடர் சமன் ஆனாலும், டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றில் மிக முக்கிய சாதனையை இந்த அணி நிகழ்த்தியது. அதேபோல் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியிருக்கிறது. இதன்மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் எங்களது ஆதிக்கம் பலமானதாக இருக்கும் என மீசை முருக்கியிருக்கிறது இந்தியா!!
