இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கு இந்தியத்தீவுகள் அணி இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டியை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் நாளை கௌஹாத்தியில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. டெஸ்ட் தொடரைப் போன்றே ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. அதேபோல் மே. இந்தியத் தீவுகள் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நிச்சயம் போராடும்.

பரிதாபமான டெஸ்ட் தோல்விகள்
ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மே.இ. தீவுகளின் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுக்கத் தவறியது மிகப்பெரிய தோல்வியை நோக்கி அந்த அணியினை அழைத்துச் சென்றது. அதுபோல அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் எவரும் நிலைமையைச் சீராக்க முற்படவில்லை. ஆனால் இரண்டாவது டெஸ்ட்டில் மே.இ. தீவுகளின் கேப்டன் ஹோல்டர் அபாரமாக பந்து வீசி இந்திய அணியினை சற்றே திணரச் செய்தார். வழக்கம் போல் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பவே 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிக் கனியை ருசித்தது.
முதல் ஒருநாள் போட்டிகள்
ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியா அசுர பலத்தில் உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளின் பக்கபலம் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தான். கடைசிப் போட்டியில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவை மட்டுமே இந்திய அணி நம்பியிருக்க வேண்டியிருந்தது. காயம் காரணமாக ஷார்துல் தாக்கூர் விளையாடவில்லை.

அவர் இன்னும் முழுமையாக குணமாகவில்லை என்பதால் முதல் இரண்டு ஒரு நாள் போட்டியிலும் அவருக்குப்பதில் உமேஷ் யாதவ் தான் பங்கேற்கிறார். இந்தியாவிற்குக் கடுமையான எதிர்ப்பை அளிக்கப் போதுமான வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்கள் வசம் உள்ளனர். அதே நேரத்தில் அனுபவமில்லாத மே.இ. தீவுகளின் பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்ய இந்திய அணியிடமும் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே போட்டி இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும் என நம்பலாம்