முதல் போட்டியிலேயே நியூசிலாந்தை பந்தாடியது இந்தியா!!

0
33
ind vs new zealand
Credit: Cricbuzz

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிராம்மாண்ட சாதனைகளை நிகழ்த்தி, வெற்றி மாலைகளின் மேல் நடந்து நியூசிலாந்திற்கு விமானமேறியது இந்திய அணி. ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டி இன்று நேப்பியரில் துவங்கியது. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ind-vs-nz-
Credit: India TV

டாஸ்வென்று முதலில் பேட் செய்தது நியூசிலாந்து. சமீப போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என நம்பப்பட்ட நியூஸி. அணி “அப்படியெல்லாம் இல்லை” என ஒப்புக்கொண்டது. ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களின் கை ஓங்கியே இருந்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 64 ரன்களை எடுத்தார். மற்ற யாரும் கிரீசில் அதிகநேரம் நிற்ககூட இல்லை. அந்த அணி வீரர்களில் ஆறு பேர் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன்களை எடுத்தனர். இறுதிவரை போராடிப்பார்த்த கேன் வில்லியம்சனுடன் யாரும் ஜோடி சேராமல் போனது அணியினை அதளபாதாளத்திற்கு இழுத்துச் சென்றுவிட்டது. கடைசியில் அந்த அணி வீரர்களின் வாங்கிய ரன்களை கூட்டி இந்தியாவிற்கு 157 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சுழல் வெற்றி

ஆஸ்திரேலியாவையே அதகளம் செய்த இந்திய பவுலர்கள் சும்மா விட்டுவிடுவார்களா என்ன? இந்தியாவின் சார்பில் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், சஹால் இரண்டு விக்கெட்டுகளையும், கேதார் ஜாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

ind vs new zealand
Credit: Cricbuzz

ஒருபுறம் ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் வேகப்பந்தில் மிரட்ட, மற்றொருபுறம் சுழற்பந்தில் சொல்லி அடித்தார்கள் சஹாலும், குல்தீப் யாதவும். பொதுவாக நேப்பியர் மைதானம் சுழற்பந்திற்கு ஏற்றது என்பதால் வீரர்களின் தன்னம்பிக்கையும் அதிகரித்து காணப்பட்டன.

ஊதித்தள்ளிய இந்தியா

157 என்னும் ஜுஜுபி டார்கெட்டுடன் களமிறங்கியது இந்திய அணி. துவக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா 11 ரன்னில் பெவிலியன் திரும்பியது அட்ரிலினை கிளப்பிவிட்டாலும் அடுத்துவந்த கோலி ஆகட்டும் பார்க்கலாம் என மீசை முறுக்கினார். தவான் வெகுநாட்கள் கழித்து உருப்படியான ஒரு இன்னிங்க்சை ஆடி, அணியில் தனக்கான வாய்ப்பை உறுதி செய்துகொண்டார். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அவுட் ஆகி (45) வெளியேறினார் கேப்டன் கோலி. அடுத்து களமிறங்கிய ராயுடு அணியின் வெற்றி இலக்கை அடையும் வரை விளையாடி 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தவான் 75 ரன்களை குவித்தார். முகமது ஷமி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 – 0 என முன்னிலை வகிக்கிறது.

சூரியன் செய்த ஸ்ட்ரைக்

மழைபொழிவினால் ஆட்டம் பாதிப்படையும் என பேச்சு அடிபட்டாலும் சூரிய பகவான் தனது வேலையை செவ்வனே செய்ததால் வேறு ஒரு புதிய பிரச்சினை உண்டானது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இலக்கும் ஒரு ரன் குறைக்கப்பட்டு 156 என நிர்ணயிக்கப்பட்டது. பொதுவாக அனைத்து மைதானங்களும் வட – தென் திசையில் அமைந்திருக்கும். ஆனால் இந்த நேப்பியர் மைதானம் கிழக்கு – மேற்கு திசையில் அமைந்திருப்பதால் சரியாக பேட்ஸ்மேன் கண்களுக்கு நேரே சூரியன் வந்து உட்கார்ந்துகொண்டார். அவர் இருக்கையை மாற்றும்வரை போட்டியானது சிறிது நேரத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டது.

ind vs new zealand sun
Credit: Cricbuzz