ஆலன் பார்டர் – சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. கடந்த 6 ஆம் தேதி துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறது.
சறுக்கிய பேட்ஸ்மேன்கள்
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த இன்னிங்க்சில் புஜாரா அதிகபட்சமாக 123(246) ரன்கள் எடுத்தார். அதன்பின்பு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு இந்திய பவுலர்கள் கடும் நெருக்கடியைக் கொடுத்தார்கள். சீரான இடைவெளியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸி. முதல் இன்னிங்க்ஸின் முடிவில் 235 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நம்பிக்கை அளித்த இரண்டாம் இன்னிங்க்ஸ்
முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியாவை விட 15 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இந்திய தனது இரண்டாவது இன்னின்க்சைத் தொடங்கியது. துவக்க ஆட்டக்காரர்களான முரளி விஜயும், கே.எல். ராகுலும் நிதானமாக ஆடினர். இருப்பினும் 44 ரன்களில் ராகுலும், விஜய் 18 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தடுப்புச் சுவர் புஜாரா தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் அவரோடு இணைந்த கோலியும் ரன்குவிப்பில் ஈடுபட இந்தியா வலுவான நிலையினை அடைந்தது. இந்திய அணியின் சார்பில் ரஹானே, கோலி, புஜாரா, ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்தியா 307 ரன்களை எட்டியது.

இந்நிலையில் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாம் இன்னிங்க்சைத் தொடர்ந்த ஆஸ்திரேலியா குறிப்பிட்ட இடைவெளியில் முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்தது. மார்ஷ் மட்டும் அந்த அணியின் சார்பில் 60 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசிவரை தோல்வியைத் தவிர்க்கப் போராடிய லியான் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மிரட்டிய இந்திய பவுலர்கள்
முதல் இன்னிங்க்சில் பும்ரா மற்றும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த ஷர்மா, ஷமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய பவுலர்களின் இந்த ஆதிக்கம் இரண்டாம் இன்னின்க்சிலும் தொடர்ந்தது. இதில் அஷ்வின், ஷமி, பும்ரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
ஒருவழியாக முதல் டெஸ்டில் வெற்றிபெற்று இந்திய ரசிகர்களை ஆரவாரத்தில் மூழ்கடித்துள்ளது இந்திய அணி. ஆஸ்திரேலியாவில் இந்தியா தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒன்று பாக்கியிருக்கிறது. அதனை முறியடித்து கோப்பையை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்ற நம்பிக்கையினை வலுப்படுத்தியிருக்கிறது இந்த வெற்றி.