வருடம் 2011. இந்தியாவும் இலங்கையும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் களம் கண்டிருந்தன. முதலில் விளையாடிய இலங்கை இமாலய இலக்கை இந்தியாவிற்கென விதித்தது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் கரங்களில் கோப்பை மிளிரும் என்ற நம்பிக்கை சேவாக்கும், சச்சினும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததன் காரணமாக கொஞ்சம் தளர்ந்திருந்தது. மொத்த இந்தியாவின் கனவும் கண்முன்னே சரியத் துவங்கியது. மூன்றாம் ஆட்டக்காரராக களமிறங்கினார் கவுதம் கம்பீர். இலங்கையின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறிடித்தார். இந்தியா உலகக் கோப்பையை வெற்றி பெறுவதற்கு மிக முக்கியக் காரணம் கம்பீர் என்றால் மிகையில்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக பல இக்கட்டான சூழ்நிலைகளில் கைகுடுத்த கம்பீர் நேற்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

துவக்க ஆட்டம்
இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்களாக சேவாக்குடன் இணைந்த கம்பீர் (2004 – 2012) இணை டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்கள். 87 போட்டிகளில் விளையாடியுள்ள இந்த இணை 4412 ரன்களைக் குவித்து இன்று வரை முறியடிக்க முடியாத வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.
2009 ஆம் ஆண்டு பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் கம்பீர் இடம்பெற்றார். அதேபோல் 2008 முதல் 2010 இடையேயான 11 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அரை சதம் கண்டதன் மூலம் விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை சமன் செய்தார் கம்பீர். அதே ஆண்டில் ஐந்து அடுத்தடுத்த சதங்களை விளாசி மற்றுமொரு மைல் கல்லை கிரிக்கெட் என்னும் நெடுஞ்சாலையில் பதித்தார். இந்தியாவின் சார்பில் 58 டெஸ்ட் போட்டிகளில் 4154 ரன்களையும், 147 ஒருநாள் போட்டிகளில் 5238 ரன்களையும், 37 T20 போட்டிகளில் 932 ரன்களையும் குவித்திருக்கிறார் கம்பீர்.
தலைவன்
கம்பீர் தலைமையில் களம் கண்ட இந்திய அணி இதுவரை தோல்வியை சந்தித்ததே இல்லை. தோனி ஓய்வில் இருந்த போது நியூசிலாந்து தொடரில் கேப்டன் பொறுப்பை ஏற்றார் கம்பீர். அந்தத்தொடரில் ஐந்து போட்டிகளிலுமே இந்தியா அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் காட்டிய கம்பீர் இரண்டு சதங்களை எடுத்தார்.

ஓய்வு குறித்து நேற்று மனம் திறந்த கம்பீர், “எனக்கான நேரம் வந்துவிட்டதென உணர்கிறேன், கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்” என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார். பல வெற்றிகள், தோல்விகள், சறுக்கல்கள், சாதனைகள் நிரம்பிய கம்பிரின் கிரிக்கெட் பயணம் நேற்றோடு முடிவிற்கு வந்திருக்கிறது. ஆனால் இன்னும் பல தலைமுறைகளுக்கு இந்தியாவின் துவக்க ஆட்டம் என்றால் கம்பிரின் பெயர் நினைவிற்கு வரும் என்பது மட்டும் உண்மை.