நேற்று நடந்த டெல்லிக்கு எதிரான இரண்டாம் தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று எட்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. விசாகப்பட்டினத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற தோனி பவுலிங்கைத் தேர்வு செய்தார். தோனியைப் பொறுத்தவரை இந்த முடிவை முந்தைய நாளே எடுத்திருப்பார். ஏனெனில் சென்னை அணியின் பலமும், பலவீனமும் அவருக்கு நன்றாகவே தெரியும். முதல் முறை இறுதிப் போட்டிக்கு தயாராகும் முனைப்பில் டெல்லி அணி களம் இறங்கியது.

சென்னை அணியின் பிள்ளையார் சுழி பவுலர் ஆன சஹார் முதல் ஓவரை வீசினார். தோனியின் சில முடிவுகளை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. இது தோனியின் ஒருவித ஸ்டைல் ஆகவே பார்க்கப்படுகிறது. அப்படித்தான் நேற்று அணியிலும் இடம் பிடித்திருந்தார் தாக்கூர். இரண்டாவது ஓவரை வீச தோனி, தாகூரை அழைத்தார். ஹாட்ரிக் பவுண்டரி. “உன்னை நம்பி டீமில் சேத்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட” ரன்களை வாரி வழங்கி விட்டு சென்றார் தாக்கூர். ஆனால் வழக்கம்போல் அடுத்த ஓவரே சஹாரின் பந்துவீச்சில் பிரித்வி ஷா அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். மைதானத்தை உன்னிப்பாக கவனித்து இருந்த தோனி ஸ்பின்னர்களுக்கு அதிக வாய்ப்பளித்தார். இதன் காரணமாக டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் தடுமாறத் தொடங்கினர்.

தவான், ஸ்ரேயாஸ் அய்யர், முன்ரோ ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறி டெல்லி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 38 ரன்களில் வெளியேறினார். யாரை நம்புவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒரு பவுண்டரியும் சிக்சரும் அடித்து இஷாந்த் சர்மா ஆறுதல் சொல்லும் நிலைமை ஏற்பட்டது.
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் டுபிளேசி மற்றும் வாட்சன் களமிறங்கினர். பவர் ப்ளேவில் அடிப்பதெல்லாம் பாவம் என்ற மனநிலையில் இருக்கும் சென்னை அணி, இந்தப் போட்டியிலும் அப்படியே ஆட்டத்தைத் துவங்கியது. முதல் 4 ஓவர்களில் 16 ரன்கள். ஆனால் பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்ற ரீதியில் டுபிளேசி கீமா பாலின் பந்தை சிதறடிக்க தொடங்கினார். மற்றொருபுறம் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வாட்சனுக்கு போதிதர்மன் சூர்யாவைப் போல் பழைய ஐபிஎல் போட்டிகளில் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தது நினைவிற்கு வந்தது. அவரும் ஒரு வழியாக அடிக்கத் தொடங்கவே டெல்லி அணியின் தலை கவிழத் தொடங்கியது.

துவக்க ஆட்டக்காரர்கள் இருவருமே அரைசதம் கடந்தனர். அப்போதே சென்னை அணி இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டது போல ரசிகர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இருவருமே சரியாக 50 ரன்களில் வெளியேறி ரெய்னா மற்றும் ராயுடு வை உள்ளே அனுப்பிவைத்தார்கள். ரெய்னா 11 ரன்களில் அவுட்டாகி தல தோனியை அனுப்புறேன் என்று பெவிலியன் பக்கம் போய் சேர்ந்தார் வின்னிங் ஷாட்டுக்காக பந்தை சிக்சருக்கு விளாச நினைத்தார் தோனி. ஆனால் அது நேராக பாலிடம் தஞ்சம் புகுந்தது. கடைசியாக பிராவோ இறங்கி ஆட்டத்தை முடித்து வைத்தார். ஆட்ட நாயகனாக டுபிளேசி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் இறுதிச்சுற்றுக்கு சென்றிருக்கும் சென்னை அணி நாளை மும்பை உடன் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.