ஐபிஎல் டி20 லீக் 12 -வது சீசன் மார்ச் 23 -ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியிலேயே பெங்களுரு அணியை ஊதித்தள்ளி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது சென்னை அணி.
இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான அடுத்த டி20 லீக் டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து சென்னை சேப்பாக்கத்தில் வரும் மார்ச் 31 -ம் தேதி நடைபெற இருக்கும் அடுத்த டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன.
வீரர் விலகல்
இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாகவே காயம் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடி விலகினார். இந்நிலையில் சென்னை அணியின் மற்றொரு வெளிநாட்டு வீரரான டேவிட் வில்லேவும் நடப்பு தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
இவர் சில தினங்களில் சென்னை அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டேவிட் வில்லேவின் மனைவிக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளதால் அவர் நடப்பு தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடி
ஐ.பி.எல் போட்டியைப் பொறுத்தவரை ஒரு அணி நான்கு வெளிநாட்டு வீரர்களை வைத்து விளையாடலாம். தற்போதைய நிலையில் ஷேன் வாட்சன், பிராவோ, இம்ரான் தாஹிர் ஆகியோர் அணியில் விளையாடுகின்றனர். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் வாட்சன், பிராவோ ஆகியோர் தற்போது சிறப்பாக விளையாடுகின்றனர். பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களிடையே ஜாலியாக அழைக்கப்படும் இம்ரான் தாஹிர் சுழற்பந்திற்கு பெயர் போனவர்.

வேகப்பந்தில் ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் ஆகியோர் இருப்பினும் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி இங்கிடி காயம் காரணமாக விலகியது அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. டேவிட் வில்லி ஆல் ரவுண்டர் என்பதால் அணிக்கு கூடுதல் பின்னடைவு.
தற்போதுள்ள நிலையில் சென்னை அணி பலமாகவே இருப்பதால், அடுத்தடுத்து வர இருக்கும் போட்டிகளில் வீரர்களின் விலகலின் தாக்கம் இருக்காது என அந்த அணியின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.