ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற, அதற்குப் பதிலடியாக இரண்டாவது டெஸ்டில் தனது வெற்றியைப் பதிவு செய்தது ஆஸி. 1 -1 என சமநிலையில் இருந்த தொடரின் மூன்றாவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் கடந்த 26 ஆம் தேதி துவங்கியது. இதில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது

முதலில் பேட் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. அறிமுக வீரரான மயங்க் அகர்வால் சிறப்பான துவக்கத்தை அளிக்க, அடுத்துவந்த கோலி – புஜாரா இணை ஆஸி. பவுலர்களை சோர்வடையச் செய்தது. பொறுமையின் உச்சக்கட்டத்தில் இருந்த புஜாரா தனது “வழக்கமான ஆட்டத்தை” வெளிப்படுத்தி சதம் கண்டார். இந்த இணையைப் பிரிப்பதற்குள் ஆஸி பவுலர்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஒருவழியாக கோலி பெவிலியன் திரும்பிய பின்னர், ரஹானே, ரோஹித் ஷர்மா என அடுத்தடுத்த வீரர்களினால் அணியின் ரன் 443 – ஐத் தொட்டபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் கோலி.
“புயல்” பும்ரா
இதனையடுத்து முதல் இன்னிங்க்சை ஆஸ்திரேலியா துவங்கியது. இந்திய பவுலர்கள் அதற்கெல்லாம் இடம்கொடுக்கவே இல்லை. யார்க்கர் புயலான பும்ராவின் பந்துகள் காற்றைக் கிழித்துக்கொண்டு ஸ்டம்புகளை சிதறடிக்கவே வந்த வேகத்தில் ஆஸி. வீரர்கள் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இன்ஸ்விங், அவுட் ஸ்விங் என பந்தில் வித்தை காட்டினார் பும்ரா. இந்த வித்தையின் காரணமாக 6 வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பும்ராவிடம் தந்துவிட்டுச் சென்றார்கள். இஷாந்த் சர்மா, ஷமி ஆகியோர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்ற ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒருவழியாக 151 ரன்களுக்கு ஆஸி. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பதிலடி
ஃபாலோ ஆன் கொடுக்காமல் தனது இரண்டாவது இன்னிக்சை இந்தியா ஆடுவதாக அறிவித்தது. படு உற்சாகமாக களத்திற்கு வந்த இந்திய வீரர்களுக்கு ஆஸி. வீரர்களின் பதிலடி அதிர்ச்சியாக இருந்தது. ஆஸி. போலவே இந்திய வீரர்களும் தட்டுத்தடுமாறி 108 ரன்கள் எடுப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போதே டிக்ளேர் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
மீண்டிருந்த தன்னம்பிக்கையுடன் ஆஸி. இரண்டாவது இன்னிங்க்சை ஆடத்தொடங்கியது. இந்திய அணி பவுலர்கள் தங்களது விஸ்வரூபத்தை எடுத்தனர். ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், பும்ரா மூன்று விக்கெட்டுகளையும், ஷமி இரண்டு விக்கெட்டுகளையும், ஷர்மா இரண்டு விக்கெட்டையும் கைப்பற்ற இனிதே ஆட்டம் நிறைவுற்றது.

இதனால் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 2 ஆம் தேதி சிட்னியில் துவங்க இருக்கிறது. அதிலும் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைக்குமா இந்தியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.