தொடர்ந்து இரண்டு தோல்விகளுக்குப் பின் சென்னை அணி நேற்று ஹைதராபாத்தை எதிர்கொண்டது. சேப்பாக்கத்தில் நடந்த இப்போட்டியில் டாஸில் வென்ற தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
சென்னை அணியில் வள்ளல் ஷார்த்துல் தாக்கூருக்குப் பதிலாக ஹர்பஜன் சேர்க்கப்பட்டார். ஹைதராபாத்தின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஷகிப் அல் ஹசன் அணியில் இடம்பெற்றார்.
வார்னரும், பேர்ஸ்டோவும் பேட்டிங்கைத் துவங்கினர். ஆனால் ஹர்பஜன் வீசிய இரண்டாம் ஓவரில் பேர்ஸ்டா அவுட் ஆனார். இதனால் சென்னை ரசிகர்கள் குஷியானாலும் “அதற்கெல்லாம் வேலையில்லை” என மணிஷ் பாண்டே அதிரடி காட்டினார். வார்னர் பொறுப்பாகவே ஆடினார். லூஸ் பால் தவிர வேறு எதையும் அடிக்க முற்படவில்லை. இந்த ஜோடி, ரன்களை கிடுகிடுவென உயர்த்தியது. சென்னை மைதானம் சூழலுக்கு ஏற்றது என தோனியும் ஜடேஜா, ஹர்பஜன் என மாத்திமாத்தி ஓவர் கொடுக்க ரன் தான் எகிறியது.
115 ரன்களை எடுத்த இந்த இணையை 14 வது ஓவரில் பிரித்தார் ஹர்பஜன். 57 ரன்களுடன் வார்னர் பெவிலியன் திரும்பினார். அடுத்துவந்த விஜய் ஷங்கர் சற்று நேரம் தாக்குப்பிடித்து 26 ரன்கள் எடுத்தார். சஹார் பந்தில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஷங்கர். அடுத்து களமிறங்கிய யூசுப் பதான் 5 ரன்களை எடுக்க அணியில் ஸ்கோர் 174 ஆக இருந்தது. பாண்டே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 83 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்த சீரியசில் எதிலுமே சீரியஸாக விளையடாத வாட்சன் மற்றும் டுபிளேசி சென்னை அணியின் சேஸிங்கைத் துவங்கினர். முதல் ஓவரை வீசிய ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் சென்னை பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார். ஸ்விங், பேஸ் என அனைத்தும் கைகூட முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்கவிடவில்லை புவனேஸ்வர். இரண்டாவது ஓவரில் கலீல் அகமதுவும் புவனேஷின் டெக்னிக்கை உபயோகித்தார். சென்னை அணியின் முதல் ரன் அந்த ஓவரின் நான்காவது பந்தில் தான் வந்தது.
டுபிளேசி அதே ஓவரில் ரன் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சியளித்தார். அடுத்துவந்த ரெய்னா பவுண்டரியுடன் தனது இன்னிங்க்சைத் துவங்கினார். சமீப போட்டிகளில் பார்ம் அவுட்டில் இருந்த ரெய்னாவை சந்தீப் ஷர்மா மீண்டும் பார்மிற்கு கொண்டுவந்தார் என்றே சொல்லவேண்டும். சந்தீப்பின் பந்தை விளாசி எடுத்தார் ரெய்னா. மற்றொரு புறம் வாட்சன் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
புவனேஸ்வர் குமார் தவிர யார் கையில் பந்து போனாலும் அடிக்கவேண்டும் என்ற முடிவில் ஆடினார்கள் இருவரும். சிறப்பாக விளையாடிய ரெய்னா ரஷித் கான் ஓவரில் இறங்கி அடிக்க ஆசைப்பட்டு ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார். அணியில் 11 பேர் இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சென்னை அணியில் இருக்கும் ராயுடு தான் அடுத்து களத்திற்கு வந்தவர். வழக்கம்போல் தடவி தடவி சிங்கிள் எடுத்து வாட்சனுக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார்.
சீண்டிய ரஷித்
ஆரம்பத்தில் ரஷித் கான் ஓவரில் தடுமாறிய வாட்சன் பின்னர் சுதாரித்துக்கொண்டார். ரஷித்தின் ஓவரில் வாட்சன் ஸ்ட்ரைட் டிரைவ் ஆட பந்து ரஷித்தின் கையை பதம் பார்த்தது. இதனால் வாட்சனை முறைத்து சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டார் ரஷித். அதுவரை சிங்கிள் எடுத்தால் போதும் என ஆடிய வாட்சன், பெரிய ஷாட்களுக்கு துணிந்தார். இந்த சீசனில் யாருமே அடிக்காத ரஷித்தை துவம்சம் செய்தார் வாட்சன்.
மந்தீப் சிங்கை ஒரு கை பார்த்த வாட்சன் இரண்டு ஓவர்களுக்கு முன்னதாகவே மேட்சை முடித்துவிடுவார் போலிருந்தது. ஆனால் 19 ஓவரில் பவுன்சரை அடிக்க முற்பட்டு பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 53 பந்துகளை சந்தித்த அவர் 96 ரன்களை குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடக்கம்.
ஆட்டத்தை முடிக்க வந்த ஜாதவ் ராயுடு போல ஆடி வெற்றியை ஒத்திப்போட்டார். கடைசி ஓவரில் 9 ரன்கள் வேண்டும். யார் வீசப்போவது ஓவரை என்று எதிர்பார்த்தபோது பந்தைத் தூக்கி மந்தீப்பிடம் கொடுத்தார் புவி. ஆனால் அதிலும் நான் அவுட் ஆவேன் என கேட்ச் ஆகி ராயுடு வெளியேற, பிராவோ வந்தார். ஜாதவ் சிங்கிள் எடுத்து ஒருவழியாக வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தார். இதன்மூலம் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது சென்னை.
அதிரடியாக விளையாடிய வாட்சனுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.