ஆறு நாடுகள் பங்கேற்கும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று துவங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கும் இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா பதவியைத் தக்க வைக்குமா? என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது. அதன்பின் இரு நாடுகளும் இந்தத் தொடரில் தான் களம் காண்கின்றன. சென்ற வருடத்துத் தோல்விக்குப் பழி தீர்க்குமா இந்தியா? என்பதும் கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி
1983 – ஆம் ஆண்டிலிருந்து ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. தொடக்கத்தில் அனைத்துப் போட்டிகளும் ஒருநாள் போட்டிகளாகவே நடத்தப்பட்டன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2015 – லிருந்து ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியானது ஒருநாள் மற்றும் T20 போட்டிகளாக சுழற்சி முறையில் நடைபெறும் என அறிவித்தது. அதன்படி கடைசியாக நடைபெற்ற ஆசியக்கோப்பை T20 போட்டிகளாக நடத்தப்பட்டது. எனவே, இவ்வருடம் ஒருநாள் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.
ஆறு அணிகள்
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் என மொத்தம் ஆறு அணிகள் போட்டியில் உள்ளன. “ஏ” பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் “பி” பிரிவில் உள்ளன. இதன் மூலம் 18 – ஆம் தேதி தனது முதல் போட்டியில் ஹாங் காங்கை எதிர்கொள்ளும் இந்தியா அடுத்த நாளே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
பழிதீர்க்குமா இந்தியா ?
சர்வதேசத் தொடர் எதிலும் இந்தியாவை வென்றதில்லை என்னும் கருத்தைக் கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தகர்த்தெறிந்தது பாகிஸ்தான். இந்நிலையில் வரும் 19 – ஆம் தேதி நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இரு அணிகளுக்குமே சவாலாக இருக்கும். பாகிஸ்தானுடனான தொடர் வெற்றியை இழந்த இந்தியாவும் நடப்பு சாம்பியன் என்னும் பெயரைத் தக்க வைக்கப் போராடும். எனவே விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இருக்காது.
கோலி அவுட்
விராட் கோலிக்கு ஓய்வு அளித்திருப்பதால் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது. தவான், ரோஹித், ராகுல், ராயுடு, தோனி, கேதார் ஜாதவ் என வலுவான பேட்டிங் வரிசையை இந்தியா கொண்டுள்ளது. வேகப் பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை பும்ரா, புவனேஷ்வர் குமார், தாகூர், கலீல் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரக மைதானங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சஹால், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இன்று நடைபெற இருக்கும் முதல் போட்டியில் வங்கதேசம் இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.