கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் பதிவுகள் செய்யப்படுகின்றன. பல சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன. ஆனால் சில தருணங்களும், பதிவுகளும் வரலாறாக மாறி ரசிகர்களின் இதயங்களில் எப்போதும் புதியதாகவே இருக்கும். சில தருணங்கள் ஆறாத காயமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சம்பவங்கள்… இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இன்றும் மறக்கமுடியாதவை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் மறக்கமுடியாத டாப் 10 சம்பவங்கள் இவையாகத்தான் இருக்கும்…
1இந்தியா vs இலங்கை, 1996 உலகக்கோப்பை அரையிறுதி

1996 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 251 ரன்கள் அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி துவக்கத்தில் வலுவாக இருந்தாலும் 100 ரன்கள் இருக்கையில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தது. 8 விக்கெட்டுகள் வீழ்ந்திருந்த போது இந்திய அணியால் வெல்ல இயலாது என அறிந்த ரசிகர்கள் கேலரியில் தீயை வைத்தனர். இதனால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
22007 உலகக்கோப்பை வெளியேற்றம்

2007 உலகக்கோப்பை இந்திய வீரர்கள் பலரின் கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. காரணம், அப்போதைய இந்திய அணியில் சேவாக், சச்சின், டிராவிட், யுவராஜ், ஜாஹீர் கான், கும்ப்ளே போன்ற பல ஜாம்பவான்கள் இடம்பெற்றிருந்தனர். கோப்பையின் கனவோடு களமிறங்கிய இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியதை அவ்வளவு எளிதில் மறந்திட இயலாது.
3

2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது பிளிண்டாப் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு, பிராட் ஓவரில் யுவராஜ் சிங் தெறிக்கவிட்ட 6 சிக்ஸர்களை இந்திய ரசிகர்கள் மனதிலிருந்து அவ்வளவு எளிதில் நீக்கிவிட முடியாது.
42003 உலகக்கோப்பை பைனல், சச்சின் விக்கெட்

2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. எதிரணி கேப்டன் பாண்டிங் சதம் விளாச இந்திய அணிக்கு 359 இலக்காக வைக்கப்பட்டது. ஸ்கோர் எவ்வளவு இருந்தால் என்ன எதிர் அணிக்கு சிம்ம சொப்பனமாக சச்சின் இருக்கிறார் என்கிற எண்ணம் இந்திய ரசிகர்கள் மனதில் இருந்தது. உள்ளே வந்த சச்சின் பவுண்டரி விளாசிய அடுத்த நொடியே அவுட் ஆனார். அந்த தருணம் இந்திய ரசிகர்களின் கோப்பை குறித்த கனவு சுக்குநூறானது.
5லாட்ஸ் டெஸ்ட் வெற்றி, கங்குலியின் ஆட்டம்

2002ஆம் ஆண்டு லாட்ஸ் டெஸ்ட் போட்டியில் தோல்வியுறும் தருவாயில் இருந்த இந்திய அணியை அப்போதைய இளம் வீரர்களான யுவராஜ் மற்றும் கைப் இருவரும் மீட்டெடுத்து வெற்றியை பெற்றுத் தந்தனர். இதனால் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்தியா வெற்றிபெற்றபோது கங்குலி லாட்ஸ் மைதானத்தின் பால்கனியில் இருந்துகொண்டு தனது பனியனை கழற்றி சுற்றிய தருணம் இந்திய ரசிகர்களின் நினைவிலிருந்து அகலாது.
62007 முதல் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்தியா!

முன்னதாக எந்தவொரு டி20 போட்டிக்கான அனுபவமும் இல்லாத தோனி தலைமையிலான அணி இந்தியா சார்பாக களம்கண்டு கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. குறிப்பாக இறுதிபோட்டியில் பலமிக்க எதிராணியான பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது கூடுதல் சிறப்பல்லவா? எப்படி மறக்கும்.
72011 உலகக்கோப்பை வெற்றி

2011ஆம் ஆண்டு உலககோப்பைக்கு களமிறங்கிய இந்திய வீரர்களுக்கு அதுவே சச்சினின் கடைசி உலகக்கோப்பை என நன்கு தெரிந்திருந்ததால், அதனை நிச்சயம் வென்று சச்சினுக்கு சமர்ப்பிக்கவேண்டும் என எண்ணினர். எண்ணம்போலவே 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையை தன் வசப்படுத்தியது. சொன்னதைப்போலவே சச்சினுக்கு சமர்பணமும் செய்தது. அனைத்திற்கும் மேலாக இந்தியாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி வென்றது கூடுதல் சிறப்பல்லவா?. போட்டியை நடத்திய நாடு கோப்பையை கைப்பற்றியது அதுவே முதல்முறை.
8சச்சினின் இறுதிப்போட்டி

இந்திய ரசிகர்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணற்ற நினைவுகளை தந்த “கிரிக்கெட் உலகின் கடவுள்” சச்சின் ஓய்வு பெரும் அந்நாளை கணத்த இதயத்துடன் பல இந்தியர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அப்படி ஒருநாள் வரும் என அந்நாள் வரை எந்தவொரு ரசிகனும் எதிர்பார்த்திருக்க மாட்டர். அதனை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாறும் எளிதில் மறந்திராது.
9சச்சின் தந்தைக்கு அளித்த இறுதி பரிசு

1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலககோப்பையின் போது சச்சினின் தந்தை இறந்துவிட்டார். தந்தையின் இறுதிச்சடங்கு முடிந்து 4 நாட்கள் கழித்து இங்கிலாந்து திரும்பினார் டெண்டுல்கர். போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேற மிச்சமிருக்கும் 3 போட்டிகளிலும் வெல்லவேண்டும். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக மனதை இறுக்கமாக வைத்துக்கொண்டு போட்டியில் களமிறங்கிய சச்சின், அப்போட்டியில் சதம் விளாசினார். அப்போது முதன்முறையாக வான்நோக்கி பார்த்து தந்தைக்கு சதத்தை சமர்ப்பணம் செய்தது இன்றளவும் ரசிகர்களால் மறக்க இயலாது. அந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 1999 காலகட்டத்தில், கென்யா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ஓரளவுக்கு வலுவாகவே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
101983 உலகக்கோப்பை வெற்றி

கத்துக்குட்டி அணியாக களம்கண்ட அன்றைய இந்திய அணி ஒன்று இரண்டு போட்டிகளில் வெல்லும் என்பதே கணிக்க முடியாத ஒன்றாக இருந்தது. கடுமையாக போராடி இறுதிப்போட்டியை நெருங்கியது. இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. 70 மற்றும் 80களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்துவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாது ஒன்று. அப்படிப்பட்ட அணியை கத்துக்குட்டி இந்திய அணி வீழ்த்துமா? ஆட்டம் இறுதிவரை வெஸ்ட் இண்டீஸ் சார்பாக மட்டுமே இருக்கும் என எண்ணினர். அத்தனையையும் தவிடுபொடியாக்கி கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் மறக்கமுடியாத டாப் 10 சம்பவங்கள் இவையாகத்தான் இருக்கும். இவை தவிர உங்கள் மனதை விட்டு நீங்காத அல்லது மறக்கமுடியாத கிரிக்கெட் நிகழ்வுகள் எதுவும் இருக்கிறதா? கமெண்ட்டில் பதிவிடுங்கள்.