இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மிஷினான விராட் கோலி பல சாதனைகளைத் தன்வசம் வைத்துள்ளார். சச்சினின் அபாரமான பேட்டிங்கைப் பார்த்து பிரம்மித்திருந்த போன தலைமுறை இன்று கோலியைப் பார்க்கிறார்கள். சொந்த மண், வெளிநாடு என எங்கேயும் கோலியின் பேட், பௌலர்களுக்கு கருணை காட்டியதில்லை. அந்த அளவிற்கு நிதானமும், ஆக்ரோஷமும் ஒருங்கே கொண்ட மிகச்சிறந்த வீரர்களில் கோலியும் ஒருவர்.

சச்சின் உலக சாதனைகளைப் படைத்துக்கொண்டிருந்த நேரத்தில் “இவை எல்லாம் நிரந்தரம் யாராலும் நெருங்க முடியாதவை” என்ற எண்ணம் பலருக்கும் வந்திருக்கக்கூடும். கோலி தற்போது அதற்கெல்லாம் விடையளித்து வருகிறார். கண் கண்முன்னே ஒரு வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் மற்றொரு மைல் கல்லாக இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் சச்சினின் இன்னொரு சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
சதங்களில் சாதனை
ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக சச்சின் 20 போட்டிகளில் ஆறு சதங்களை எடுத்துள்ளதே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. அடுத்த இடத்தில் ஐந்து சதங்கள் மூலம் கவாஸ்கர் மற்றும் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளனர். 11 போட்டிகளில் கோலி ஐந்து சாதனைகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகவே வரும் 6 ஆம் தேதி தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் அடித்தால் கவாஸ்கரின் சாதனையை கோலி முறியடிப்பார். இன்னும் ஒரு சதம் கோலியால் அடிக்கப்படுமேயானால் ஆஸ்திரேலிய மண்ணில் சச்சின் சாதனையை முறியடித்த பெருமை கோலியைச் சேரும்.
தகிக்கும் வெப்பம்
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பேட்டிங் திறமை எல்லாம் இரண்டாம் பட்சம் தான். ஹெல்மெட்டுடன் உள்ளிறங்கும் எதிரணியின் பேட்ஸ்மேன்களை வசைபாடுவது, அதன்மூலம் அவர்களது கவனத்தைத் திசை திருப்பி விக்கெட் எடுப்பதெல்லாம் அவர்களுடைய இரத்தத்தில் ஊறிப் போன ஒன்று.
சொல்லப்போனால் அவர்களுடைய இந்த மோசமான யுக்தி பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஆனால் பெருநிதானியான சச்சினின் முன்னால் இந்த வேலைகள் பலித்ததில்லை. பந்தைத் தவிர சச்சின் வேறு எதையுமே பார்ப்பதும் இல்லை. ஆனால் ஆக்ரோஷப் புயலான கோலி ஆஸி. வீரர்களின் தந்திரத்தைத் தாங்குவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இதுவரை இந்திய அணி படைக்க முடியாத ஒரு சவால் ஆஸ்திரேலிய மண்ணில் காத்திருக்கிறது. அதனை விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி சாதித்துக் காட்டுமா? என்பதை வரும் டெஸ்ட் போட்டிகள் சொல்லிவிடும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஷேர் செய்யவும்.