இன்றுடன் விடை பெறுகிறார் இங்கிலாந்து கிரிக்கெட்டின் நாயகன் அலஸ்டர் குக்

0
47

அலஸ்டர் குக் (Alastair Cook) இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். இவருக்கு வயது 33. இங்கிலாந்து அணியில் 2006 – ஆம் ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாக ஆடி வருகிறார் குக்.

எப்போதும் முகத்தில் ஒரு சின்னச் சிரிப்பு, பேட்டிங் ஃபீல்டிங் எதுவாயினும் எதிரணியினரிடம் நட்பு பாராட்டுதல் போன்றவை உலக கிரிக்கெட் ரசிகர்களின் அன்பைப் பெற அலஸ்டர் குக்கிற்கு உதவி புரிந்தன.

இந்தியாவிற்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமான குக், அந்தப் போட்டியில் 104 ரன்கள் விளாசினார். இதனை நிகழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் மற்றும் ஒட்டு மொத்தமாக இந்தியாவிற்கு எதிராக இந்த மைல் கல்லை எட்டிய மூன்றாவது வீரர் குக் ஆவார்.

இப்போது அதே இந்தியாவிற்கு எதிராகத் தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடும் குக், இந்தப் போட்டியிலும் சதம் அடித்துச் சாதனை படைத்து விடை பெற்றிருக்கிறார்.

இவை இங்கிலாந்து அணியின் நாயகன் அலஸ்டர் குக் பற்றிய முக்கியக் குறிப்புகள்

 • இந்தியாவிற்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியைத் தொடங்கிய அலஸ்டர் குக், இந்தியாவிற்கு எதிராகவே தனது கடைசி டெஸ்ட் போட்டியையும் விளையாடி உள்ளார்.
 • குக் நான்கு டி-20 போட்டிகள், 92 ஒருநாள் போட்டிகள், 160 டெஸ்ட் போட்டிகள் என 256 சா்வதேசப் போட்டிகளில் விளையாடி உள்ளாா்.
 • 92 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3204 ரன்கள் அடித்துள்ளார். அதில் ஐந்து சதங்களும், 19 அரை சதங்களும் அடங்கும்.
 • ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 137 ரன்கள் எடுத்துள்ளார். இது பாகிஸ்தானுக்கு எதிராக 2012 – ஆம் ஆண்டு அடிக்கப் பட்டதாகும்.
 • ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக ஒரு சதமும் அடித்துள்ளார். இவர் தனது முதல் ஒரு நாள் போட்டியை இலங்கைக்கு எதிராக விளையாடி உள்ளார்.
 • 2006 – ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி மூலம் அறிமுகமான குக், இந்தியாவிற்கு எதிராக நாக்பூரில் விளையாடினார்.
 • அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 60 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 104* ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
 • 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,472 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 32 சதங்களும், 56 அரை சதங்களும் அடங்கும். ஐந்து முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
 • டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 294 ரன்கள் எடுத்துள்ளார். அதுவும் இந்தியாவிற்கு எதிராகத் தான். 2011 – ஆம் ஆண்டு எடுத்தார். இந்தியாவிற்கு எதிராக இதுவரை ஆறு சதங்களை அடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இவரது சராசரி 44.88 ஆகும்.
 • டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த ஆறாவது வீரராக உள்ளார். இங்கிலாந்தைப் பொறுத்த வரை அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
 • குக் 59 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். அதில் 24-ல் வெற்றியும், 22-ல் தோல்வியும் பெற்று, 13 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இரண்டு முறை இவரது தலைமையில் ஆஷிஷ் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது.

எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் அவர்கள் ஓய்வு பெறும் நாள் மிகவும் கடினமானது. அந்த ஒரு இரவை அவர்கள் கடப்பது கடினம். இன்று அலஸ்டர் குக் ஓய்வு பெற இருக்கிறார். ” என்னால் இயன்றது அனைத்தையும் அணிக்காகக்  கொடுத்து விட்டேன். இனி என்னிடம் கொடுப்பதற்கு ஏதுமில்லை.” என தன் ஓய்வு குறித்து வேதனையுடன் அறிவிக்கிறார் குக்.

எந்த அணியின் வீரரும், எந்த நாட்டின் திறமையாளரும் நம் அன்பிற்கும், பாராட்டிற்கும் தகுதி உடையவர் தான். சென்று வாருங்கள் குக்.