இங்கிலாந்து டெஸ்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி – வீரர்களின் வியத்தகு சாதனைகள் !!

0
106
Credit : Indian Express

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடித்  தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால் மூன்றாவது போட்டியில் ஆடும் லெவனில் மாற்றங்கள் செய்யப்பட்டன. முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவானும், குல்தீப் யாதவிற்குப் பதிலாக பும்ராவும், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக ரிசப் பான்டும் களமிறக்கப்பட்டனர்.

இந்த வியூகம் சரியாகக் கை கொடுக்க, நேற்றுடன் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் இந்தியா அபாரமாக செயல்பட்டது. வெற்றியுடன் சில குறிப்பிடத் தகுந்த சாதனைகளையும் புரிந்தனர் இந்திய அணியினர்.

வேகப்பந்தில் 19 விக்கெட்டுகள்

இந்திய வேகப்பந்து வீச்சுக்குழு 19 விக்கெட்டுக்கள் வீழ்த்திச் சாதனை படைத்துள்ளது.

இந்த போட்டியில் இந்தியா, பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகிய பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. அஸ்வினைத் தவிர மற்ற நான்கு பேரும் வேகப்பந்து வீச்சாளர்கள்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 38.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. இதனால் அஸ்வின் பந்து வீசவில்லை. மேலும் அவருக்கு காயம் வேறு ஏற்பட்டது. இந்த இன்னிங்சில் ஹர்திக் பாண்டியா ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

Credits : Times Now

இதனால், முதல் இன்னிங்சில் வேகப்பந்து வீச்சாளர்களே 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள். 2-வது இன்னிங்சில் பும்ரா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா, ஷமி, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

நான்காவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகள்

விராட் கோலி முதல் இன்னிங்சில் 97 ரன்களும், 2-வது இன்னிங்சில் 103 ரன்களும் குவித்தார்.  இங்கிலாந்து கேப்டன் இந்த முறை தடுமாறியதும், இந்திய கேப்டன் அசத்தியதும் நம் வெற்றிக்கு முக்கியக் காரணங்கள்.

இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்களும், 2-வது இன்னிங்சில் அரைசதமும் அடித்தார்.

பும்ரா நான்காவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் நான்காவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் 2014-ல் லார்ட்ஸ் டெஸ்டில் இஷாந்த் ஷர்மா 74 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

இரண்டு வீரர்கள் – தலா 7 கேட்ச்கள்

கே.எல் ராகுல் மற்றும் ரிசப் பான்ட் ஆகியோர் ஆளுக்கு 7 கேட்ச்கள் பிடித்து, 141 வருட கிரிக்கெட் வரலாற்றில் செய்ய முடியாத சாதனையைச் செய்துள்ளனர்.

லோகேஷ் ராகுல் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 கேட்ச்கள் பிடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் விக்கெட் கீப்பரைத் தவிர்த்து அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக அதிக கேட்ச் பிடித்ததில் 2-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அதே போல, ரிசப் பான்ட் தான் களம் இறங்கிய முதல் டெஸ்ட்டிலேயே 7 கேட்ச்கள் பிடித்து சாதனை புரிந்துள்ளார். டெஸ்டில் இரண்டு வீரர்கள் தலா ஏழு கேட்ச்கள் பிடித்தது இதுதான் முதல் முறையாகும்

Credits : Business Standards

அதிக வெற்றி பெற்ற கேப்டன்

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு புதிய மைல்கல்லைக் கடந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் அவர் சவுரவ் கங்குலியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பிடித்துள்ளார். இதுவரை விராட் கோலி தலைமையில் இந்திய அணி 38 டெஸ்ட் போட்டிகளில் 22 வெற்றிகளைப் பெற்றுள்ளது. முதல் இடத்தில் 27 வெற்றிகளுடன் தோனி உள்ளார்.

கேரளாவிற்கு சமர்ப்பணம்

கேப்டன் கோலி நேற்று வெற்றிக்குப் பின் பேசுகையில், “ஒரு அணியாக இந்த வெற்றியை கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறோம்.” எனக் கூறினார். அதைத் தொடர்ந்து, இந்திய அணி ஒட்டு மொத்தமாகத் தங்கள் போட்டி ஊதியத்தை கேரளா வெள்ள நிவாரணத்திற்கு அளிக்க முன் வந்துள்ளது.
ஒரு டெஸ்ட் போட்டிக்கு களத்தில் ஆடும் பதினோரு இந்திய வீரர்களுக்கு 15 லட்சமும், உத்தேச அணியில் இடம் பிடித்து, களமிறங்காத மற்ற வீரர்களுக்கு அதில் பாதியும் ஊதியமாக வழங்கப்படும். இதைக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட இரண்டு கோடி வரை வரும்.