52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வெல்லும் கனவோடு களமிறங்கியுள்ள இங்கிலாந்தை அரை இறுதியில் 2-1 என வென்றது குரேஷியா. இதன் மூலம் குரேஷியா முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் குரோஷியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதவுள்ளன.
அரையிறுதியில் ஐரோப்பிய அணிகள்
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. கடந்த மாதம் 14ம் தேதி துவங்கிய இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றன. முதல் சுற்று ஆட்டங்கள், நாக் அவுட் ஆட்டங்களைத் தொடர்ந்து காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களும் முடிந்துள்ளன. முன்னதாக பிரான்ஸ், பெல்ஜியம், குரேஷியா, இங்கிலாந்து ஆகியவை அரை இறுதிக்கு நுழைந்தன.
1982 மற்றும் 2006க்குப் பிறகு ஐரோப்பாவைச் சேர்ந்த நான்கு அணிகள் அரை இறுதியில் விளையாடுகின்றன. தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடே கோப்பையை வெல்ல உள்ளது. 2006ல் இத்தாலி, 2010ல் ஸ்பெயின், 2014ல் ஜெர்மனி கோப்பையை வென்றன.இந்நிலையில் நாளை இறுதிப்போட்டியில் மோதவுள்ள குரோஷியா மற்றும் பிரான்ஸ் அணிகள் கடந்து வந்த பாதையை இக்கட்டுரையில் காணலாம்.
குரோஷியா கடந்து வந்த பாதை
இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரேஷியா அனைத்து ஆட்டங்களிலும் வென்றுள்ளது. லீக் சுற்றில் நைஜீரியாவை 2-0, அர்ஜென்டினாவை 3-0, ஐஸ்லாந்தை 2-1 என வென்றது.
நாக் அவுட்டில் டென்மார்க்கை 3-2 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது. காலிறுதியில் ரஷ்யாவை 4-3 என பெனால்டிஷூட்டில் வென்றது. நான்காவது முறையாக உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ள குரேஷியா, 2வது முறையாக அரை இறுதியில் விளையாடியது.
52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வெல்லும் வெறியோடு களமிறங்கிய இங்கிலாந்து அணியை அரை இறுதியில் குரேஷியா சந்தித்தது. கூடுதல் நேரத்தின் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குரேஷியா.
மரியோ மண்ட்ஸுகிக் (Mario Mandzukic) – 2 கோல்கள் (இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகளுக்கு எதிராக)
லூக்கா மார்டரிக் (Luka Modric) – 2 கோல்கள் (நைஜீரியா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு எதிராக)
இவான் பெர்சிக் (Ivan Perisic) -2 கோல்கள் (இங்கிலாந்து மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு எதிராக )
பிரான்ஸ் கடந்து வந்த பாதை
இந்த உலகக் கோப்பையில் சி பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1 என போராடி வென்றது. பெருவுக்கு எதிராக 1-0 என்று வென்றது. டென்மார்க்குடன் கோல் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது.
நாக் அவுட் சுற்றில், கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 4-3 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் முன்னாள் சாம்பியனான உருகுவேயை 2-0 என வென்றது. 6வது முறையாக உலகக் கோப்பை அரை இறுதியில் பங்கேற்கும் பிரான்ஸ், 1998ல் கோப்பையை வென்றது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் வெளியேறியது.
அரை இறுதியில் பிரான்ஸ் பெல்ஜியம் அணியை சந்தித்தது . அப்போட்டியில் பெல்ஜியம் அணியின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. பெரும்பாலான நேரம் பந்து அந்த அணியிடமே இருந்தது. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததின் மூலம் பிரான்ஸ் வென்று, 12 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது. இதற்கு முன்னர் 2006ல் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது பிரான்ஸ்.
அண்டோனி கிரீஸ்மேன் (Antoine Griezmann) – 3 கோல்கள் (ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் உருகுவே அணிகளுக்கு எதிராக)
கயலின் ம்பாப் (Kylian Mbappe) – 3 கோல்கள் (பெரு மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு எதிராக )
பெஞ்சமின் பாவர்ட் (Benjamin pavard) – 1 கோல் (முதல் சர்வதேச கோல்,அர்ஜென்டினாவிற்கு எதிராக )