இந்துக்களின் முழு முதற் கடவுளான விநாயகரின் பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் சுக்கில பட்ச சதுர்த்தி திதி நாளன்று விநாயக சதுர்த்தி வழிபாடு நடத்தப்படுகிறது. அன்றைய நாளில் களிமண்ணினால் செய்த விநாயகருக்கு இனிப்புகள் படைத்து மக்கள் வழிபடுவர். இந்துக்களின் ஒவ்வொரு நற்செயலின் துவக்கத்தின் போதும் பிள்ளையாரை முதலில் வழிபடுவது வழக்கம். வெற்றிலையில் மஞ்சளைக் கொண்டு பிள்ளையார் பிடிக்கும் வழக்கமும் இருக்கிறது.

வழிபாட்டு முறை
விநாயகர் சதுர்த்தி தொடங்கி அடுத்த ஒன்பது நாட்கள் வரை கொண்டாட்டம் தொடரும். இந்தியாவின் சில பகுதிகளில் 11 நாட்கள் வரை வழிபாடுகள் நடக்கின்றன. அங்கே இவ்விழா அனந்த சதுர்த்தி விழாவாகக் கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாகக் களிமண்ணினால் செய்யப்பட்ட பிள்ளையாரை 30 நாட்கள் வரை தங்கள் பூஜை அறையில் வைத்து வணங்குவர் மக்கள். புரட்டாசி மாதம் சதுர்த்தி அன்று விருந்து படைத்த பின் குளத்திலோ, ஆற்றிலோ, கடலிலோ விநாயகரைக் கரைப்பார்கள். சிலர் விநாயக சதுர்த்தியின் அடுத்த நாள் புனர் பூஜையை முடித்த பின்னர் அருகிலிருக்கும் நீர்நிலைகளில் கரைக்கின்றனர்.

இனிப்புப் பிரியர்
இனிப்புப் பலகாரங்களை விரும்பி உண்ணும் விநாயகருக்கு சதுர்த்தி அன்று மோதகம், அவல், பொரி, சர்க்கரை, பச்சரிசி, கொழுக்கட்டை, சுண்டல், அப்பம் போன்றவற்றை படைப்பது வழக்கம். அதனால் தான் அவ்வையார் பிள்ளையாரை,” பேழை வயிறும் பெரும்பாட்டுக் கோடும்” என்று பாடினார். மண்ணினால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை அணிவித்து மகிழ்வர்.

விநாயகர் விரதம்
சதுர்த்தி நாட்களில் விநாயகர் விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மாதாமாதம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ என்கின்றனர். இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை ‘சங்கடஹர விநாயக சதுர்த்தி’ என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் ‘விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது.
விநாயகரை சதுர்த்தியன்று தொடர்ந்து வணங்கி வந்தால் 21 பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நாமும் முழுமுதற் கடவுளை வணங்கி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுவோம்.