சகல வளங்களையும் தரும் வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். அன்று பெண்கள், குறிப்பாக சுமங்கலிப் பெண்கள் தங்களின் தாலி பாக்கியத்துக்காகவும், குடும்ப சுபிட்சம், மற்றும் சௌபாக்கியம் நிலைக்கவும், இந்த விரதத்தை பக்தியுடன் மேற்கொள்ள வேண்டும்.
கேட்கும் வரங்களை அள்ளித் தரும் லட்சுமி தேவியை பூஜிப்பதால், வாழ்க்கையில் நிலையான செல்வமும், நீடித்த புகழும் கிடைக்கும். திருமணமான பெண்கள், ஒவ்வொரு வருடமும் தவறாமல் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சந்தர்ப்பவசத்தால் வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக நேரிட்டால், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம்.
வரலட்சுமி விரதம் வரலாறு
வரலட்சுமி விரதம் தோன்றிய வரலாறாக பல்வேறு கதைகள் உலா வருகின்றன. அவற்றுள் முக்கியமானது இது தான்.
சிவபெருமானின் உபதேசப்படி, மகாலட்சுமியை வழிபட்டு விரதம் பூண்டாள் உமாதேவி. இதனாலேயே முருகன் அவதாரம் நிகழ்ந்தது என புராணங்கள் கூறுகின்றன. மலைமகளாம் பார்வதி தேவி, அலைமகளாம் திருமகளைப் போற்றி, விரதம் பூண்ட நன்னாளே வரலட்சுமி விரத நன்னாள் ஆகும்.
வரலட்சுமி விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கீழ்கண்ட கதை தெரிவிக்கிறது. மகத தேசத்தில் குண்டினபுரம் என்னும் நகரில் பிறந்து வாழ்ந்து வந்தாள் சாருமதி. கற்பில் சிறந்தவள். தன் கணவன், மாமனார், மாமியாருக்கு வேண்டிய நற்பணிகளைச் செய்வதையே வாழ்நாள் பாக்கியமாகக் கொண்டவள். வறுமையிலும் பெருமையான வாழ்க்கையை நடத்தி வந்தாள்.
எத்தகைய வறுமையிலும் இறைவனை வணங்கிடத் தவறியதில்லை. அவளுக்கு அருள்புரிய நினைத்த மகாலட்சுமி, சாருமதியின் கனவில் தோன்றினாள். “உனது சிறப்பான பக்தி எனது நெஞ்சை நெகிழ வைத்தது. நீ என்னை பூஜித்து வழிபாடு செய்வாய். அதனால் உனக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்” என்றாள். அதன்படி சாருமதி மேற்கொண்ட விரதமே வரலட்சுமி விரதம். அதன் பயனாக பதினாறு செல்வங்களையும் பெற்றாள் சாருமதி.
பூஜைக்குத் தேவையான பொருட்கள் :
பிள்ளையார் பிடிக்க மஞ்சள் பொடி, நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தாம்பாளம் , பஞ்சபாத்திரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு.
இந்தப் பூஜையை விரிவாகச் செய்ய இயலாவிட்டால், இதய சுத்தியுடன் ஈடுபாட்டோடு, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடைக் கையில் கட்டிக் கொள்ளலாம். வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி, நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, இந்த விரத பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
நிவேதனம்:
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.
பூஜை செய்யும் முறை
வீட்டின் கிழக்கு திசையில், ஈசான்ய மூலைப்பகுதியில் பூஜைக்கான இடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த இடத்தை நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ், நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசியைக் கும்பத்தில் நிறைத்து, மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரிக்கவும்.
புதிய வஸ்திரம் சாற்றி, நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் முக பிம்பத்தை வைத்து, பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும். விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களை நீக்கும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.
விரதம் இருக்கும் வெள்ளிக்கிழமை அன்று காலை ராகு காலத்துக்கு முன்போ அல்லது அன்று மாலையோ, ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வர வேண்டும்.
அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்பது சாஸ்திரம்
பின், அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹனம் செய்ய வேண்டும். இந்த கலசத்தில் வரலட்சுமி அம்மன் வந்து இருப்பதாக ஐதீகம் மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாடி தேவியை வழிபட வேண்டும்.
அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்பது சாஸ்திரம் என்பதால், ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் வைக்க வேண்டும்.பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை (சரடு) கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.
மன சுத்தியுடன் செய்யப்படும் இந்த பூஜையானது தேவியை மகிழச் செய்து, நம் இல்லத்தைத் திருமகள் குடியிருக்கும் கோவிலாக மாற்றும்.
இப்படியெல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் பிழையில்லை. மனதை நல்லெண்ணங்கள் மற்றும் நேர்மறை எண்ணங்கள் சூழ வைத்துக் கொள்ளுங்கள். உண்மையில் அது தான் இறைவன் குடியிருக்கும் இடம்.