ஆடிப்பெருக்கு – நம்பிக்கைகளும், உண்மையும் !!

0
136

ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடி பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக தமிழ் விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப் படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டேநடைபெறுகிறது. நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் விழாக்கள் ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பொங்கல் ஆகியன மட்டுமே ஆகும் .

இந்த விழா தோன்றிய வரலாறாக பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்று, மகாபாரதப் போர் நடந்த 18 நாட்களைக் கணக்கில் கொண்டு, போர் முடிந்த நாளே ஆடிப்பெருக்காகக் கொண்டாடப் படுகிறது என்பது தான்.

ஆடிப்பெருக்கும் மகாபாரதப் போரும்.

மகாபாரதப் போர் ஆடி 1-ம் தேதி துவங்கி ஆடி 18 – ம் தேதி வரை. பதினெட்டு நாட்கள் நடைபெற்றது. போரின் முடிவில் பாண்டவர்கள் கெளரவர்களை வென்று அரசுரிமை பெற்றனர்.

வெற்றிபெற்ற பின்னர், ஆடி பதினெட்டு அன்று ஆற்றில் குளித்துவிட்டு போரிட்ட போர்க்கருவிகளான கத்தி, கேடயம் போன்றவற்றைக் கழுவியதன் நினைவாகவே
ஆடிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

போர் துவங்குவதற்கு முன்பாக போரில் வெற்றிபெற யாரேனும் ஒருவரை தங்கள் பக்கம் பலிகொடுக்க வேண்டும். இதை களப்பலி என்பார்கள். போரில் வெற்றி பெற பாண்டவர்கள், தங்கள் பக்கம் தங்களது மகனான அரவானை பலி கொடுத்தனர்.

அந்த நாளின் நினைவாகத் தான் ஆடிமாதம் 1-ம் தேதி தேங்காய்சுடும் பண்டிகை கொண்டாடப்படும். சிறுவர்கள் தேங்காய் சுடுவது கபால மோட்சத்தோடு ஒப்புநோக்கப்படுகிறது. தேங்காய் ஓடு வெடித்து சிதறுவது போல நம் ஆணவங்கள் எல்லாம் வெடித்து சிதறிவிட வேண்டும் என்பதால் அந்நாள் கொண்டாடப்படுகிறது என்பது நம்பிக்கை.

 ஆனால், அது உண்மை என்று வைத்துக் கொண்டால் இந்தியா முழுவதும் அந்நாள் கொண்டாடப் பட வேண்டும் அல்லவா? ஏதோ ஒரு மூலையில் நடந்த மகாபாரதப் போர் முடிவுற்ற நாளை நாம் கொண்டாடும் போது சம்பந்தப்பட்ட வட இந்திய மக்கள் ஏன் கொண்டாடுவதில்லை ? 

தமிழர் பண்டிகை

ஆடிப்பெருக்கு என்பது தமிழர் பண்டிகை. நம் பண்டிகைகள் அனைத்தும் இயற்கையோடும், விவசாயத்தோடும் தொடர்பு கொண்டே ஏற்படுத்தப்பட்டவை.

தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர்.

இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து, பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் விளைந்தது.

காவிரியைக் கொண்டாடும் ஆடிப்பெருக்கு !
தமிழகத்தின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

  • மேட்டூர் அணை,
  • பவானி கூடுதுறை,
  • ஈரோடு,
  • பரமத்தி-வேலூர்,
  • குளித்தலை,
  • திருச்சி,
  • தஞ்சாவூர்,
  • மயிலாடுதுறை,
  • பூம்புகார்

இவ்வருடம் காவிரி கடைமடை வரை பாய்கிறது. ஏனைய பிற ஆறுகளிலும் தண்ணீர் ஓடுகிறது. கொண்டாடுவோம்! அனைவருக்கும் ஆடிப்பெருக்கு தின வாழ்த்துகள். நீடூழி வாழ்க !!