உலகம் முழுவதும் இன்று தைப்பூசம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அசுரர்களின் கொடுஞ்செயல்கள் அதிகரித்துவந்ததன் காரணமாக சிவ பெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து கந்தனை உருவாக்கினார். பேராற்றலின் வடிவமான அன்னை மீனாட்சி அசுரர்களை வதைக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியதே தைப்பூச திருநாளாகும். ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்கள் அனைத்திலும் தைப்பூச விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகேயன்
ருத்ரனின் காலக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாகினர். அவர்களை கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தார்கள். பின்னர் உமாதேவியின் அருளால் குழந்தைகள் ஒன்றிணைந்து ஆறுமுகன் தோன்றினான். இப்படி முருகன் உதித்த இடம் தான் பழனியில் இருக்கும் சரவணப்பொய்கை ஆகும். மேலும் அன்னையிடமிருந்து கந்தவேல் வேலை வாங்கியதும் பழனியில் தான். அதன்காரணமாவே மற்றைய திருத்தலங்களைக்காட்டிலும் பழனியில் தைப்பூச விழா வெகுவிமர்சியாகக் கொண்டாடப்படுகிறது. அதன்பின்னரே அசுரர்களை வதம் செய்து தேவர்களை காத்தார் கந்தன். சூரனை வதம் செய்த இடம் திருச்செந்தூர் ஆகும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, நார்வே என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

விரதம்
மார்கழி அல்லது தை முதல் வாரத்தில் பழனி முருகனுக்கு துளசிமாலை அணிந்து விரதம் இருப்பார்கள் மக்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். பால்குடம், காவடி எடுத்தல், அலகு குத்துதல் என பக்தர்கள் தங்களது நேத்திக்கடன்களை செலுத்துகின்றனர்.
அசுரர்களை அழித்த வேலனை வழிபடுவதன் மூலமாக நம் மனதில் சூழ்ந்திருக்கும் பொறாமை, குரோதம், வன்மம் போன்றவைகளை அழிக்க முடியும். தைப்பூச நாளின் போது முருகனை வழிபட்டால், மனதில் இருக்கும் அச்சங்கள் விலகி ஆன்ம பலம் பெருகும். நம்மைச் சூழும் துயரங்களை தூள் தூளாக்கும் வலிமையுள்ள கந்தவேளினை இந்தத் தைப்பூச நன்னாளில் வணங்குவோம். எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகட்டும்.
