தமிழ்ப்புத்தாண்டு உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது?

Date:

இந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு நிகழ இருக்கிறது. பிறக்க இருக்கும் விகாரி வருடம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படியான பலன்களைத் தரப்போகிறது? என்பதை துல்லியமாக விளக்குகிறார் பிரபல ஜோதிடர் ஹரிகிருஷ்ணன். சரி, ராசி அடிப்படையில் புத்தாண்டுப் பலன்களைக் கீழே காணலாம்.

மேஷம்

உங்களுடைய ராசிக்கு நான்காம் ராசியில் இந்த வருடப்பிறப்பு நிகழ்கிறது. இது உங்களுடைய புகழை அதிகரிக்கும். பொதுக்காரியங்களில் பல முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடிவரும். பெரிய இடத்தில் இருப்பவர்களும் உங்களுடன் நட்பு பாராட்டுவார்கள். குடும்பத்தினைப் பொறுத்தவரை மனைவி உங்களுடன் அனுசரனையாக நடந்துகொள்வார். குழந்தைகளினால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தட்டிப்போன நல்ல காரியங்கள் கைகூடும். திருமண முயற்சிகள் பலன் அளிக்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு இந்த வருடத்தில் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மன வலிமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

முன்கோபத்தை குறைப்பது நல்லது. இதனால் சிறிய சிறிய பிரச்சினைகள் வரலாம். வேலைப்பளு அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். வழக்குகளில் வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. ஆதாயத்துடன் கூடிய பயணங்கள் அடிக்கடி அமையும். முன்பகையை பொறுமையுடன் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள். விடா முயற்சி இருந்தால் மலையும் மடு என நீங்கள் உணர்ந்துகொள்ளும் வருடம் தான் பிறக்கப்போகும் விகாரி.

ரிஷபம்

உங்களுடைய ராசிக்கு 10 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்கும் போது விகாரி பிறக்கிறது. இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு பல இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. நடக்காது, முடியாது என நினைத்திருந்த வேலைகளை முடித்துக்காட்டுவீர்கள். தன்னம்பிக்கை உங்களுக்குள் ஊற்றெடுக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது.

வருடம் முழுவதும் சனி, அஷ்டமத்துச் சனியாகத் தொடர்வதால் ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு உருவாகும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். குழப்பத்திலும், கோபத்திலும் முடிவெடுக்காதீர்கள். வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள்.

உத்தியோக உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக காக்கவைத்த வேலை, பதவி கைகூடும். திருமண வரன்கள் கூடிவரும். மொத்தத்தில் இந்த புத்தாண்டு உங்களுடைய வாழ்வில் இன்ப சரவெடிகள் தொடர்ந்து வெடிக்கும் ஆண்டாக இருக்கும்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறக்கிறது. யாரிடமும் உதவியை வேண்டாமல், அதிரடியாய் நீங்களே எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். நீண்டகாலமாய் மனதில் இருந்துவந்த குறைகள் அகலும். குடும்பத்திற்குள் நல்ல காரியங்கள் நடக்கும்.

பண வரவுகள் அதிகரிக்கும். புதுப்புது தொழில்வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பூர்வீக சொத்துகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் அதிக அக்கறை எடுக்கும் காலம் இதுவாக இருக்கும். வீண் பழி, கோபம், வதந்தி ஆகியவற்றால் மன அமைதி பாதிக்கப்படும்.

கணவன் – மனைவி இடையே சிறுசிறு பிணக்குகள் வந்து சரியாகும். பந்து விட்டுப் பேசுவது தேவையற்ற சண்டையை தவிர்க்கும். குழந்தைகளினால் உங்களுடைய அந்தஸ்து உயரும். அவர்களின் கல்விக்காக கடன் வாங்குவீர்கள். பழைய பாக்கிகள் தேவைப்படும் காலத்தில் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

கடகம்

புதுவருடம் பிறக்கும் காலத்தில் உங்களுடைய ராசிக்கு சாதகமான இடத்தில் செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் இருப்பதால் பல வழிகளில் நன்மை உங்களுக்குக் காத்திருக்கிறது. வெளிநாடு சென்று பொருள் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும். முடிவுகளில் உறுதியும் தர்க்கமும் அதிகரிக்கும். குடும்பத்தார் உங்களுடைய மதிநுட்பம் வாய்ந்த பேச்சினால் மகிழ்ச்சியுறுவர்.

உங்களுடைய செல்வாக்கு உயரும். பொதுக்காரியங்களில் புதிய பதவிகள் உங்களைத் தேடிவரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டும். வீண் அலைச்சல்கள் வரலாம்.

சந்தேக உணர்வு அதிகரிக்கும். குடும்பத்தினரோடு விவாதங்களில் ஈடுபடவேண்டாம். மனைவியுடன் சண்டைகள் வந்து அகலும். புதுத் தொழில்களில் இறங்கும்முன் யோசித்தல் அவசியம். புதிய நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுங்கள். அயலாரிடம் குடும்ப விஷயங்களைக் கூறவேண்டாம்.

சிம்மம்

உங்களுடைய ராசியின்மேல் சுக்கிரனுடைய பார்வை இருக்கும் போது வருடப்பிறப்பு நிகழ இருக்கிறது. இது உங்களுடைய தேவையை பூர்த்தி செய்யும். நீண்ட நாட்களாக தேடிவந்த சரியான வேலைவாய்ப்பு அமையும். புதுவீடு கட்டுவீர்கள். பூர்வீக நிலங்கள் உங்களைத் தேடிவரும். வாகன யோகம் உண்டு.

அலுவலகங்களில் உங்களுடைய பேச்சிற்கு மரியாதை அதிகரிக்கும். உயர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குல தெய்வ வழிபாடு நிம்மதியைக் கொடுக்கும். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கருத்துவேறுபாட்டால் பிணக்குகள் வரலாம்.

கணவன் – மனைவிக்கு இடையே புரிதல்கள் நிமித்தம் மனஸ்தாபங்கள் ஏற்படும். தொழில்விருத்தி மற்றும் குழந்தைகளின் உயர்கல்விக்காக கடன் வாங்க நேரிடலாம். வெளியூர் பயணங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொறுமையே பெருமை என்பதை உணர்ந்துகொண்டால் இந்த விகாரி வருடம் உங்களுக்கு பல வெற்றிகளை அள்ளித்தரும் என்பதில் சந்தேகமில்லை.

கன்னி

இதுவரை உங்களின் வெற்றிக்குத் தடையாய் இருந்த தயக்கம் மற்றும் பயம் ஆகியவை விலகும். வாழ்வில் புது நம்பிக்கை துளிர்விடும். அலுவலகம் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களோடு நெருக்கம் அதிகரிக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மற்றொரு பக்கம் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெகுநாள்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டத் தவறாதீர்கள். தாயாரின் உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் வரலாம். வீட்டுவசதிப் பொருட்கள் வாங்கும்போது கவனமாக இருங்கள். உங்களைப்பற்றிய வீண் வதந்திகள் கிளம்பும். அமைதியாய் இருப்பதே நல்லது. மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

ஆதாயம் தரக்கூடிய அலைச்சல் இருக்கும். வரவு அதிகமிருப்பினும் செலவும் ஒரு புறத்தில் அதிகரிக்கும். பிறர் வாங்கும் கடன்களுக்கு உத்திரவாதம் அளிக்காதீர். தேவையற்ற கடன்களை தவிர்க்கவும். கடின உழைப்பும், மன உறுதியும் வெற்றிக்கு வித்திடும் என நீங்கள் புரிந்துகொள்ளும் காலம் இது.

துலாம்

உங்களுடைய ராசிக்கு பத்தாம் இடத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் புதுவருடம் பிறப்பது பல நன்மைகளை உங்களுக்குத் தரும். புத்துணர்வாக உணர்வீர்கள். தடைகளை மதி கொண்டு உடைப்பீர்கள். காத்திருந்த வேலைகள் கைகூடும். நெருக்கமானவர்களிடம் முக மலர்ச்சியுடன் பேசுவீர்கள். இதனால் நெருக்கம் அதிகமாகும்.

சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மனைவியிடம் இருந்துவந்த சண்டைகள் அகலும். பெரிய பதவியில் இருப்பவர்களுடன் நட்புகொள்ளும் நேரம் வரும். நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணம், புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

செலவுகள் அதிகரிக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் கவனமாக இருங்கள். வாழ்க்கைத் துணைக்கு உடல்நல குறைபாடு வரலாம். எதிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலம் இது. பயணங்கள் மற்றும் செலவுகளால் அவ்வபோது கவலை ஏற்படும். கடமைகளை சரிவர செய்தால் அதன் பலனை நிச்சயம் அனுபவிக்கலாம் என்று நீங்கள் உணரும் ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும்.

விருச்சிகம்

சந்திரன் 9 ஆம் இடத்திலிருந்து உங்களுடைய ராசியைப் பார்க்கும்போது புதுவருடம் பிறக்கிறது. இதனால் எடுத்த காரியம் எத்தனை சவால் மிகுந்ததாக இருப்பினும் சாதித்துக்காட்டுவீர்கள். தன்னம்பிக்கை உங்களுக்கு அசுர பலத்தைத் தரும். நிலம், வீடு வாங்கும் கனவு நிறைவேறும். மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உடல்நலத்தை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்வது நல்லது. குழந்தைகளின் மீது உங்களுடைய கோபத்தை காட்டவேண்டாம். பிறர் பிரச்சினையில் தலையிடுவதைத் தவிர்க்கவும். மனைவி வீட்டார் வழியில் குழப்பங்கள் வரலாம்.

தொழில் விருத்தியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பெரிய தொகையை கடனாக வாங்கும்போது உஷாராக இருங்கள். சக ஊழியர்களினால் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். இந்த புதிய வருடம் உங்களுடைய வாழ்வில் புதிய அத்தியாயம் ஒன்றினைத் திறக்க இருக்கிறது என தாராளமாகச் சொல்லலாம்.

தனுசு

ராசிக்கு 8-ம் வீட்டில் சந்திரன் இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால் கடுமையான உழைப்பிற்குப் பிறகே வெற்றி கிட்டும். அதே நேரத்தில் மனவலிமையும் அதிகரிக்கும். பண வரவு கணிசமாக இருக்கும். குழப்பங்கள் நீங்கி மனத் தெளிவு பிறக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும்.

தெளிவான பேச்சால் பலரையும் உங்களது வழிக்கு வர வைப்பீர்கள். தொழிலில் புதிய முயற்சிகள் கைகூடும். தாமதமான பதவி உயர்வு இப்போது கிடைக்கும். போட்டியாளர்களை திறம்பட சமாளிப்பீர்கள். புனித தளங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

கணவன் மனைவி இடையே மனக்கசப்புகள் வரலாம். கோபத்தில் வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். புதிய நண்பர்களின் பேச்சைக் கேட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். நிதானமாக யோசித்தால் இந்த ஆண்டு உங்களுக்கு நன்மை தரும் ஆண்டாக அமையும்.

மகரம்

அதிகாரம் உங்களைத் தேடி வரும் ஆண்டாக இது இருக்கப்போகிறது. தொட்ட காரியம் துலங்கும். பகைவர்கள் மறைவார்கள். வாழ்வில் புதிய வெளிச்சம் பிறக்கப்போகிறது. புத்திசாலித்தனமான முடிவுகளால் வெற்றிவாகை சூடுவீர்கள். பெரிய இடத்தில் இருப்பவர்கள் உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள்.

திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி பிறக்கும். பழைய கடன்களை தக்க நேரத்தில் அடைப்பீர்கள். பரம்பரை நிலங்கள் தொடர்பான வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய வீடு, நிலம் வாங்கும் வாய்ப்புவரும். பண வரவு கணிசமாக அதிகரிக்கும். புதிய தொழில்களில் ஈடுபாடு செலுத்துவீர்கள்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி நடப்பது நல்லது. உணவுகளில் கவனம் செலுத்துங்கள். அலைச்சலால் உடல்நலம் பாதிப்பிற்கு உள்ளாகலாம். சோர்வு, மன உளைச்சல் ஏற்பட்டு நீங்கும். பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி காணும் வருடமாக இந்த ஆண்டு விளங்கும்.

கும்பம்

சுக்கிரன் ராசியில் இருக்கும்போது வருடம் பிறப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும். பேச்சில் நிதானமும், தன்னம்பிக்கையும் துளிர்விடும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். பழைய பாக்கி உங்களைத் தேடிவரும். வீட்டில் சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

உறவினர்களிடம் இருந்துவந்த பழைய கசப்புகள் நீங்கும். தொழில்களில் லாபம் அதிகரிக்கும். பொது விஷயங்களில் உங்களுடைய தலையீடு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். எதிர்க்கருத்து உள்ளவர்களும் உங்களுடன் சமாதானமாக போக விரும்புவார்கள்.

வாழ்வில் அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்கப் போகிறீர்கள். திருமணம், குழந்தை பாக்கியம் என நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும் ஆண்டாக இந்த விகாரி இருக்கப்போகிறது.

மீனம்

உங்களுடைய ராசிக்கு மூன்றாம் இடத்தில் செவ்வாய் வலுவாக இருக்கும்போது விகாரி வருடமானது பிறக்கிறது. உங்களுக்குள் மறைந்திருந்த ஆற்றல் வெளிவரும். துணிச்சலாக முடிவெடுத்து வெற்றியை எட்டிப்பிடிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பண வரவு அதிகரிக்கும்.

உடல் வலிமை அதிகரிக்கும். வீட்டை பெரிதுபடுத்துதல், புதுவீடு கட்டுதல் ஆகிய பணிகள் சிறக்கும். பணி நிமித்தமாக பயணங்கள் அதிகமாகலாம். கணவன் மனைவிக்கு இடையே கருத்துமோதல்கள் தொடரும். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். வீட்டு விஷயங்களில் மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள்.

மன உளைச்சல் அதிகமாகும். அலுவலகங்களில் சக ஊழியர்களால் சிக்கல்கள் வந்து அகலும். பொறுமையாக பிரச்சனைகளை கையாளக் கற்றுக்கொள்ளுங்கள். குடும்பத்தோடு புண்ணிய தலங்களுக்குச் சென்று வர வாய்ப்பு கிடைக்கும். விட்டுக்கொடுத்துப்போனால் வாழ்க்கை கெட்டுப்போகாது என்பதை உணர்த்தும் வருடம் தான் இந்த விகாரி.

 

 

வாசகர்கள் அனைவருக்கும் எழுத்தாணியின் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!