குரு பெயர்ச்சியைத் தொடர்ந்து வரும் விழாவான புஷ்கர விழா இன்று தாமிரபரணியில் துவங்குகிறது. வரும் 22 ஆம் தேதி வரை இவ்விழா கொண்டாடப்பட இருக்கிறது. ஒவ்வொரு குரு பெயர்ச்சியின் போதும் குரு பகவான் பெயர்ச்சியாகும் ராசிக்குரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடுவது ஐதீகம். அதன்படி விருச்சிக ராசிக்குரிய தாமிரபரணி நதியில் இந்த ஆண்டு தாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடப்பட இருக்கிறது.

மகா புஷ்கர விழா
இம்முறை வரும் தாமிரபரணி புஷ்கர விழா 144 வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடியதாகும். இதனால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி ஆற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரை உள்ள 143 தாமிரபரணி படித்துறைகளில் பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் அங்குள்ள 64 தீர்த்தக் கட்டங்களும் புனரமைக்கப்பட்டிருக்கின்றன. ஜடாயு தீர்த்தம், செப்பறை கோவில், மணி மூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறைகள் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளன.
நெல்லைக்கு விரையும் தலைவர்கள்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாபநாசத்தில் இந்த விழாவைத் துவக்கி வைக்கிறார். தாமிரபரணி புஷ்கர ஒருங்கிணைப்புக் குழு, சிருங்கேரி மற்றும் காஞ்சி மடங்கள், சித்தர்கள் கோட்டம் ஆகியவற்றின் சார்பில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
நதியின் ஆழமான இடங்களுக்கு சென்றுவிடாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 3000 காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 27 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.