கிருஷ்ண ஜெயந்தி – வீட்டிற்கு வரும் கண்ணன் !!

Date:

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் காக்கும் கடவுளான, மஹா விஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படும் கிருஷ்ணனின் பிறந்த தினமே கிருஷ்ண ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது.

இந்நாள் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி எனவும் வழங்கப்படுகிறது. இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தியானது நாளை (2/09/2018) ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது.

lord krishna
Credit: Wall snapy

கிருஷ்ண அவதாரம்

உலகை அளந்தவனின் உலக வாழ்வு சிறையிலிருந்து துவங்குகிறது. மதுரா நகரில் வாசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக கிருஷ்ணன் பிறந்தான். எடுத்த அவதாரத்தின் நோக்கமாகிய கம்சனை அழித்த பின்னர் துவாரகையை ஆட்சி செய்தான் கமலக் கண்ணன். அதற்கு முன் கோகுலத்தில் யசோதையால் வளர்க்கப்பட்ட கிருஷ்ணனின் லீலைகளைக் கொண்டாடும் விதமாக வட இந்தியாவில் ராச லீலா என்னும் நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

lord krishna
Credit: Gennet

பார்த்தசாரதியாக ..

இந்துக்களின் புனித நூலான கீதையை இவ்வுலகத்திற்கு அளித்தவன் கிருஷ்ணனே. போர்க்களத்தில் மனத்துயருற்று இருந்த அர்ஜுனனுக்கு வாசுதேவ கிருஷ்ணன் தேரோட்டியாகச் சென்றார். அப்போது அர்ஜுனனுக்கு அவரளித்த உபதேசங்களே கீதை என்று புகழப்படுகிறது.

பிருந்தாவனத்தில் கண்ணனின் திருவடி படாத இடம் ஒன்றில்லை. எல்லோருடனும் அன்பு செலுத்தும் குணமே ஞானம் என்றும் அதற்கான தகுதி எளிமையாய் இருத்தல் மட்டுமே என்றும் நினைவுபடுத்த வந்த தெய்வக் குழந்தை கிருஷ்ணர். கடலளவு எதிரிகள் முன்னால் இருந்த போதும் சத்தியம் எதுவோ அதன்படி நிற்பதே சிறந்தது என்பதைக் குருக்ஷேத்திரத்தில் நிரூபித்துக்காட்டிய தீரன்.

lord krishna
Credit: Nav Hindu

தமிழகத்தில் கண்ணன்!!

கிருஷ்ண ஜெயந்தி நாளின் போது இந்துக்கள் அனைவரும் தத்தம் வீடுகளை மலர் கொண்டு அலங்கரிப்பார்கள். கண்ணனின் பால்யத்தை கொண்டாடுவதற்காக, குழந்தைகளுக்குப் பிடித்த இனிப்புகளைச் செய்து விருந்தளிப்பார்கள். பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் அரிசி மாவால் நனைத்த மழலையின் பிஞ்சுப் பாதங்களை வாசலில் இருந்து பூஜை அறை வரைக்கும் பதிப்பார்கள். இது கிருஷ்ணனைத் தங்கள் வீட்டிற்கு அழைக்கும் நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது.

அதேபோல் அருகிலிருக்கும் வைணவத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படும். கேரளாவின் குருவாயூரில் உள்ள மஹாவிஷ்ணுவின் ஆலயத்திற்கு இந்நாளில் லட்சக்கணக்கான மக்கள் தரிசனத்திற்குச் செல்கின்றனர்.

sweet
Credit: Tasty Appetite

அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்றும், நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம் என்றும் கிருஷ்ணனைத் தமிழ் மணக்கும் பல பாடல்களின் வழியாக ஆழ்வார்கள் வணங்கியுள்ளனர்.

யாருக்கானவன் கிருஷ்ணன் ?

krishnaas foot step
Credit: Pinterest

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மல்லாண்ட திண் தோள் மணிவண்ணனின் காலடி பட்ட இடங்கள் அவன் பெருவாழ்வின் அடையாளமாக மதுரா, பிருந்தாவன் இடங்களில் இன்றும் வணங்கப்படுகின்றன. தன் வாழ்நாள் முழுவதும் எல்லா உயிர்களுக்குமானவராகவும் விளங்கினார் ஸ்ரீ கிருஷ்ணர். பஞ்ச பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் போர் நடந்து முடிந்த பின்னர் குதிரைகளின் காயங்களுக்குத் தானே மருந்தளித்தார் கண்ணன். ஆயர்பாடியில் ஏராளமான மாடுகளை அன்புடன் வளர்ந்து வந்ததன் நினைவாக இன்றும் அங்கு இலட்சக்கணக்கான மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கிருஷ்ணனின் அறிவுரைகளின் படி உலகத்திலுள்ள எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவோம். வருகின்ற கிருஷ்ண ஜெயந்தி நம் எல்லோரின் வாழ்விலும் மகிழ்ச்சியை பரவச் செய்யட்டும்.

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!